தொடரும் சோகம்: கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு !!!
பெரிய தடாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. ஒரு வருடத்தில் மட்டும் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்து உள்ளன.
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியான மாங்கரை, ஆனைகட்டி, தடாகம் ஆகிய வனப்பகுதிகள் கேரள வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இதன் காரணமாக, கேரள வனப்பகுதியில் இருந்தும், தமிழக வனப்பகுதியில் இருந்தும் யானைகள் மாறி மாறி இடம்பெயர்வது வழக்கம்.
தற்போது, கேரளாவில் கோடைகாலம் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அங்குள்ள யானைகள் தமிழ்நாடு வனப்பகுதியை நோக்கி வருகை தருகின்றன. இதனால், தமிழக வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன.
இந்த யானைகளை கண்காணிப்பதற்கா கோவை வனத்துறையினர் பெரிய தடாகம் பகுதியில், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள தனியார் நிலத்தில், யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டறிந்து உள்ளனர். மேலும், டிரான்ஸ்பார்மர் அருகில் யானை இறந்து கிடந்ததால், இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்து உள்ளனர்.
அதன்பேரில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, கோயம்புத்தூர் வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
உயிரிழந்த ஆண் யானைக்கு சுமார் 15 முதல் 20 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ள நிலையில், உயிரிழப்புக்கான முழுமையான காரணம் இனிமேல் தான் தெரியவரும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
யானை இறப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆண் யானைகள் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது. கடந்த மார்ச் மாதம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் இதேபோன்று ஆண் யானை ஒன்று டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் கம்பியை இழுத்த போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்களை தவிர்க்க, பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதோடு, உயிரிழந்த யானைகளின் உடலை முழுமையான பரிசோதனை செய்து, இறப்புக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
யானைகள் தொடர்ந்து இறந்து வருவது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை எழுப்பி உள்ளது. பெரிய தடாகம் பகுதியில் இறந்த யானையுடன் சேர்த்து இந்த வருடம் 5 யானைகள் இறந்து உள்ளதால், உடனடி நடவடிக்கைகள் தேவை என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0 கருத்துகள்: