வெள்ளி, 18 செப்டம்பர், 2026

"28 நாட்களுக்கு பின் பிடிபட்ட ஆட்கொல்லிப் புலி" ; ஓவேலியில் இருவரைக் கொன்ற புலி கூண்டில் சிக்கியது - பொதுமக்கள் நிம்மதி!

SHARE

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் இரண்டு தோட்டத் தொழிலாளர்களைக் கொன்று பீதியை ஏற்படுத்திய ஆட்கொல்லிப் புலி, 28 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் வைத்த கூண்டில் பத்திரமாகச் சிக்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லார்ஸ்டன் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இருவரைக் காட்டுப் புலி ஒன்று கொடூரமாகத் தாக்கிக் கொன்றது.

இந்தத் தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த தோட்டத் தொழிலாளர்களும், அப்பகுதி பொதுமக்களும் ஆட்கொல்லிப் புலியை உடனடியாக சுட்டு வீழ்த்த வேண்டும் அல்லது கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தித் தொடர் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்கத் தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அடர்ந்த வனப்பகுதிகளில் 244 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும், புலி நடமாட்டம் அதிகம் உள்ள 13 முக்கிய இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டன.

கால்நடை மருத்துவக் குழுவினர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வனச் ஊழியர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, ஆளில்லா ட்ரோன் கேமராக்கள் மற்றும் கும்கி யானைகளின் உதவியுடன் 28 நாட்களாகத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஓவேலி அருகே உள்ள வட்டப்பாறை எனும் இடத்தில் வனத்துறையினர் அமைத்து இருந்த கூண்டிற்குள் அந்த ஆட்கொல்லிப் புலி இரையைத் தேடி வந்தபோது அதிர்ஷ்டவசமாகச் சிக்கியது. புலி கூண்டில் சிக்கிய தகவலை அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்.

சம்பவ இடத்தில் முகாமிட்டு உள்ள வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர், கூண்டில் அடைக்கப்பட்டு உள்ள புலியின் உடல்நிலையைப் பரிசோதித்து வருகின்றனர்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளின்படி, பிடிபட்ட புலியைப் பாதுகாப்பாக வனவிலங்கு மீட்பு மையத்திற்குத் கொண்டு செல்வதா அல்லது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுவதா ? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: