திங்கள், 6 ஜூலை, 2026

தகாத உறவால் பறிப்போன 3 வயது குழந்தையின் உயிர் !!!

SHARE

 தகாத உறவால் பறிப்போன 3 வயது குழந்தையின் உயிர் !!!

தகாத உறவால் 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம், சீர்காழி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்காவிற்கு உட்பட்ட ஆலவேலி கிராமம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கனிவண்ணன் (வயது 31). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2020- ஆம் ஆண்டு அதே தெருவைச் சேர்ந்த கவிப்பிரியாவை (வயது 25) காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயது மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அரிவேளூர் கிராமத்தில் தனியார் நுண்கடன் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பணம் வசூல் செய்யும் பணியில் இருந்த அபினேஷ் (வயது 30) என்பவருடன் திருமணத்திற்கு முன்பே கவிப்பிரியாவுக்கு பழக்கம் இருந்து உள்ளது. 

திருமணத்திற்கு பிறகும் இருவருக்கும் பழக்கம் தொடர்ந்தது. அது நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதனால் கனிவண்ணனுக்கும், கவிப்பிரியாவிற்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்து உள்ளது.

இதை அடுத்து, கணவனைப் பிரிந்த கவிப்பிரியா, செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட ஆக்கூர் பாரதி வீதியில் குடியிருப்பு வளாகம் ஒன்றின் முதல் தளத்தில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கவிப்பிரியாவின் வீட்டிற்கு வந்துச் செல்வதை அபினேஷ் வாடிக்கையாக வைத்து இருந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 25- ஆம் தேதி தனது 3 வயது மகன், பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிப்பட்டு பலத்த காயம் அடைந்ததாக மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி கடந்த ஜூன் 29- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கவிப்பிரியாவின் குழந்தை உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த கனிவண்ணன் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுச் செய்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, ஜூன் 30- ஆம் தேதி குழந்தையின் உடல் கனிவண்ணன் வீட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தையைத் தள்ளி விட்டு மோதியதில் தான் உயிரிழந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கவிப்பிரியா மற்றும் அபினேஷைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கவிப்பிரியா தண்ணீர் எடுக்க சென்ற போது 3 வயது குழந்தை தொடர்ந்து அழுது அடம் பிடித்ததால் ஆத்திரம் அடைந்த அபினேஷ் குழந்தையைக் கீழே பிடித்து தள்ளி சுவற்றில் மோதியதில் தலையில் அடிபட்டதாகத் தெரிவித்து உள்ளார். இதனை மறைத்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக இருவரும் நாடகமாடியது தெரியவந்தது.

இதை அடுத்து காவல் துறையினர் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கவிப்பிரியாவை திருச்சி பெண்கள் சிறையிலும், அபினேஷை கடலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

தகாத உறவால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம், சீர்காழி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: