கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் நிதி முறைகேடு... போத்தீஸ் நில வாடகை, போலி வங்கி கணக்கு மூலம் பல லட்சம் கையாடல் - HR & CE இணை ஆணையரிடம் புகார் !!!
தற்காலிக ஊழியர் பெயரில் கரண்ட் அக்கவுண்ட்; மாற்று மதத்தினர் கடைகளில் லட்சக்கணக்கில் லஞ்சம்; செயல் அலுவலர் மற்றும் பணியாளர் மீது குற்றச்சாட்டு !!!
கோவை பிரசித்தி பெற்ற கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் ராஜகோபுர திருப்பணி நன்கொடை, திருவிழா நிதிகள் மற்றும் போத்தீஸ் நிறுவன நில வாடகை விவகாரங்களில் பல லட்சம் ரூபாய் கையாடல் நடந்து உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) இணை ஆணையரிடம் ஆதாரங்களுடன் புகார்
தனியார் நபர் பெயரில் போலி கரண்ட் அக்கவுண்ட் தொடங்கி பணத்தைச் சுருட்டியது ஆதாரங்களுடன் அம்பலமாகி உள்ளது.
கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பக்தர்கள் சார்பில் அளிக்கப்பட்டு உள்ள அந்த புகார் மனுவில்,
கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் (EO) மற்றும் கோவில் பணியாளர் சுந்தரம் ஆகிய இருவர் மீதும் கையாடல் புகார்கள் சுமத்தப்பட்டு உள்ளன.
திருக்கோவிலில் நடைபெற்று வரும் ராஜகோபுர கட்டுமானப் பணிக்காகப் பக்தர்கள் லட்சக்கணக்கில் வழங்கி வரும் நன்கொடைப் பணத்தை முறையாகக் கோவில் கணக்கில் சேர்க்காமல், 'பரத்' என்ற தற்காலிகப் பணியாளரின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) சட்டவிரோதமாகக் ‘கரண்ட் அக்கவுண்ட்’ (Current Account) ஒன்று திறந்து, அதில் பணத்தைச் செலுத்தித் தங்களது சொந்த பயன்பாட்டிற்குச் சுருட்டி வருவது அம்பலமாகி உள்ளது.
மேலும், கோவில் திருவிழாக்களுக்காகப் பக்தர்களிடம் பெறப்படும் நன்கொடைகளைக் கணக்கில் காட்டாமல், கோவில் நிதியில் இருந்தே செலவு செய்ததாகப் போலி பில்களை உருவாக்கி நிதி முறைகேடு செய்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
போத்தீஸ் நில வாடகை கையாடல் - மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் லஞ்சம்?:
அதுமட்டுமன்றி, ராணேஜி ராவ் அறக்கட்டளைக்குச் சொந்தமான கோவில் நிலத்தில் இயங்கி வரும் போத்தீஸ் (Pothys) நிறுவனத்திடம் இருந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அறநிலையத் துறை நிர்ணயித்த நியாயமான வாடகையை வசூலிக்காமல் பழைய வாடகையையே பெற்றுக் கொண்டு முறைகேடு செய்து உள்ளனர். இது தொடர்பாக ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் வழக்குகளில் சரியாக ஆஜராகாமல், அவர்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருவதாகக் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கடைகளில் மாற்று மதத்தினர் காலி செய்து சென்ற இடங்களை, இணை ஆணையரின் எவ்வித அதிகாரப்பூர்வ ஒப்புதலுமின்றி (DCP entry இல்லாமல்) தன்னிச்சையாகப் புதிய நபர்களுக்கு ஒதுக்கி, அவர்களிடம் லட்சக்கணக்கில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு மாதாந்திர லஞ்சம் வாங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த அனைத்து நிதி முறைகேடுகளுக்கும் ஆதாரமாகத் தற்காலிகப் பணியாளர் பரத் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கரண்ட் அக்கவுண்ட் ஆவணங்கள் இணை ஆணையரிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலிலும் இத்தகைய நிதி முறைகேடு புகார்கள் வெடித்து உள்ள சம்பவம் ஆன்மீக அன்பர்கள் மற்றும் கோவை மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: