“போனில் ஆபாச படம் பார்த்தியா ? கோர்ட் ஃபைன் கட்டு” ; கோவை முதியவரிடம் ரூ.38,000 சுருட்டிய ‘போலி’ போலீஸ் கும்பல் அதிரடி கைது !!!
பீளமேடு எஸ் பி ஆபிஸ் என்று சொல்லி ஜிபே (GPay) மூலம் மிரட்டிப் பணம் பறிப்பு : சைபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கை !!!
“நீங்கள் செல்போனில் ஆபாசத் திரைப்படம் பார்த்ததற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது; உடனடியாக ஆன்லைன் மூலம் நீதிமன்ற அபராதம் கட்டாவிட்டால் கைது செய்வோம்” என மிரட்டி, துடியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் ரூ.38,000 பறித்த 2 ‘போலி’ போலீசாரைக் கோவை மாநகர் சைபர் கிரைம் துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
கோவை, துடியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்குக் கடந்த மே 15 (15.05.2026) அன்று போன் செய்த மர்ம நபர்கள், “நாங்கள் பீளமேடு எஸ்.பி அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். நீங்கள் போனில் ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள், அதற்கு உடனடியாக அபராதம் கட்ட வேண்டும்” என மிரட்டி உள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன், பயத்தில் தன் நண்பர்களிடம் கடன் வாங்கி கூகுள் பே (GPay) மூலம் ரூ.38,000 அனுப்பி உள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த (CCPS Cr. No. 63/2026 U/s 204, 308(2), 318(4), 319(2) BNS & 66D IT Act) சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பச்சாபாளையத்தைச் சேர்ந்த பி. சபரி (25) மற்றும் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த கே. வினு (21) ஆகிய இருவரும் தான் போலீஸ் போல் நடித்து பணத்தைச் சுருட்டியது அம்பலமானது.
இதை அடுத்து இருவரையும் கைது செய்த சைபர் கிரைம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்: