“சிரிக்காதீங்க ஒரு ஆளை அடிச்சு போட்டு இவ்வளவு நக்கலா சிரிக்கிறீங்க ?” ; டாஸ்மாக் ஊழியர்கள், போலீஸ்காரரை கிழித்தெறிந்த பெண்: கோவை கொந்தளிப்பு !!!
ஆட்டுக்குட்டி உள்ளே நுழைந்ததால் முதியவர் மீது கொடூரத் தாக்குதல்: கடைக்கு ஆதரவாகச் சிரித்த சிங்காநல்லூர் போலீஸ் – வீடியோ வைரல் !!
கோவை, இருகூர் அருகே ஆட்டுக்குட்டி ஒன்று டாஸ்மாக் கடைக்குள் புகுந்ததற்காக, அதை மேய்த்து வந்த முதியவரை டாஸ்மாக் ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவமும், அதைக் தட்டிக்கேட்க வந்த முதியவரின் குடும்பப் பெண்ணை பார்த்துச் சிங்காநல்லூர் காவலர் ஒருவர் நக்கலாகச் சிரித்த விவகாரமும் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருகூர் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது ஆடுகளை வழக்கம் போலத் தரிசு நிலங்களில் மேய்த்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறிய ஆட்டுக்குட்டி அங்கு இருந்த டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், முதியவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி கொடூரமாகத் தாக்கி உள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல் நிலையக் காவலர் ஒருவர், பாதிக்கப்பட்ட முதியவருக்கு ஆதரவாகப் பேசாமல், டாஸ்மாக் கடையினருக்கு ஆதரவாகப் பேசியதுடன், நியாயம் கேட்ட முதியவரின் குடும்பத்துப் பெண்ணைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டு நின்று உள்ளார்.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அப்பெண், "சிரிக்காதீங்க! ஒரு ஆளை பிடிச்சு அடிச்சு போட்டு இவ்வளவு நக்கலா சிரிக்கிறீங்க... இங்கே எல்லாரும் சிரிக்கிறதுக்கு தான் வந்திருக்காங்களா?" என அந்த இடத்திலேயே யோசிக்க வைக்கும் வகையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சம்பவத்தை அங்கு இருந்தவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
"லஞ்சம் வாங்கிக் கொண்டு தவறு செய்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்தக் காவலர் மீது காவல் துறை உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த ஒரு டாஸ்மாக் கடையால் மட்டுமே அந்த ஊரில் இதுவரை 69 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இந்தக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: