புதன், 22 ஜூலை, 2026

ஓட்டலில் சாப்பிட சென்ற சிறுவன் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் பயங்கரம் !!!

SHARE

 ஓட்டலில் சாப்பிட சென்ற சிறுவன் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் பயங்கரம் !!!

விக்கிரமசிங்கபுரத்தில், உணவகத்திற்கு சாப்பிட சென்ற இளைஞரையும், சிறுவனையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்கிரமசிங்கபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த இசக்கி பாபு (19). இவர் தனது நண்பரான கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (21), அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆகியோருடன் நேற்றிரவு மேற்கு ரத வீதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிடச் சென்று உள்ளார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், இவர்கள் மூவரிடமும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் அவர்கள் தாக்கிக் கொண்டனர். அப்போது மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிறுவன் உள்பட 3 பேரையும் வெட்ட முயற்சித்து உள்ளார். இதனை பார்த்து பயந்து போன மூவரும், அங்கு இருந்து ஓடி உள்ளனர். எனினும், அவர்களை விடாமல் துரத்திச் சென்ற மர்ம நபர்கள், சந்தனமாரியம்மன் கோவில் பின்புறம் அவர்களை வழிமறித்து, சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இந்த தாக்குதலில் சுபாஷ் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில், இசக்கி பாபு, சிறுவன் ஆகிய இருவருக்கும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. பின்னர் காயம் அடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

சிறுவனுக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் அங்கு இருந்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் அவர் அழைத்து செல்லப்பட்டார். தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


உணவகத்திற்கு சாப்பிட சென்ற நபர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: