புதன், 22 ஜூலை, 2026

பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்ற அவலம் !!!

SHARE

 பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்ற அவலம் !!!

ஆரணி அருகே உள்ள ஆவணியாபுரம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (28) என்பவர் நேற்று (ஜூலை 20) இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தின் போது, அந்த கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், உயிரிழந்தவரின் உடலை வயல்வெளி வழியாக சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

ஆனால், வயல்வெளி வழியாக உடலை எடுத்துச் செல்வதால், அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைவதாகவும், இதனால் பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் உடலை வயல்வெளி வழியாக எடுத்து செல்லும் சம்பவம் சமூக வலைதலங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிராமத்திற்கு சுடுகாடு செல்லும் முறையான பாதை வசதி இல்லாதது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து ஆவணியாபுரம் கிராம மக்கள் கூறுகையில், 

சுடுகாட்டிற்கு செல்லுவதற்கான முறையான பாதை அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்களுக்கு பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், ஒவ்வொரு முறையும் கிராமத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் போது இந்த அவல நிலையே தொடர்வதாகவும், உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலை நீண்ட நாட்களாக தொடர்வதாகவும், இதற்கான தீர்வு தற்போது வரை எட்டப்படவில்லை எனவும் அந்த கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதை அடுத்து, இது போன்ற அவலநிலை ஏற்படாத வகையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஆவணியாபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடுகாட்டிற்கு செல்ல நிரந்தரமான சாலை மற்றும் நடைபாதை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: