“டேய் கல்லெடுத்து போட்டா வெடப்பு டா” ; கோயில் கருவறைக்குள் துதிக்கையை விட்டு பிரசாதம் தேடிய காட்டு யானை - சிறுவர்கள் எடுத்த வீடியோ வைரல் !!!
கோவை, பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பரபரப்பு: பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தல் !!!
கோவை, பெரிய தடாகம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் அடிவாரத்தில், விநாயகர், சித்தர் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. அதில் ஒரு கோவிலின் கருவறைக்குள் துதிக்கையை விட்டுப் பிரசாதத்தைத் தேடிய ஒற்றைக் காட்டு யானையைக் கண்டு சிறுவர்கள் பயமும் சுவாரஸ்யமுமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
கோவை தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், அனுவாவி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அடிவாரத்தில் அமைந்து உள்ள பிள்ளையார் உள்ளிட்ட சிறிய சந்நிதிகளின் அருகே நேற்று இரவு ஒற்றைக் காட்டு யானை ஒன்று உலா வந்து உள்ளது.
உணவைத் தேடி வந்த அந்த யானை, கோயிலின் சிறிய கருவறைக்குள் தனது தலையை நுழைத்து, பிரசாதங்கள் ஏதேனும் இருக்கிறதா ? எனத் துதிக்கையால் அங்குமிங்கும் தேடத் தொடங்கியது.
இந்த அபூர்வக் காட்சியை அங்கு இருந்த சிறுவர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
அப்போது யானையின் அசைவுகளைப் பார்த்துப் பதற்றம் அடைந்த சிறுவர்கள், தங்களுக்குள் கொங்கு தமிழில் "டேய் கல்லெடுத்து போட்டா வெடப்பு டா!" (கல் எடுத்து வீசினால் மிரண்டு கோபப்படும்) என எச்சரிக்கையாகப் பேசிக் கொண்ட உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனுவாவி முருகன் கோயில் அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே இந்த ஒற்றைக் காட்டு யானை தொடர்ந்து சுற்றித் திரிந்து வருவதால், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினரும் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: