செவ்வாய், 28 ஜூலை, 2026

மரத்தை வெட்டுனா சும்மா விடுவோமா? - கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டியவர்களுக்கு ₹2.10 லட்சம் அதிரடி அபராதம் !!!

SHARE

 மரத்தை வெட்டுனா சும்மா விடுவோமா? - கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டியவர்களுக்கு ₹2.10 லட்சம் அதிரடி அபராதம் !!!

10 மரக்கன்றுகள் நடவும் உத்தரவு - வருவாய்த் துறையின் நடவடிக்கைக்குச் சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு !!!

 கோவையில் அரசு அனுமதியின்றி மற்றும் அனுமதி வரம்பை மீறி மரங்களை வெட்டிய நபர்களுக்குப் பல ஆயிரங்களில் இல்லாமல், ரூ.2.10 லட்சம் வரை அதிரடியாகப் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

கோவை மாநகர் வெரைட்டி ஹால் சாலையைச் சேர்ந்த சங்கர்லால் என்பவர், தனது சொந்த இடத்திற்கு எதிரே பொது வழியில் இருந்த புங்கை மரத்தைக் கடந்த 10-ஆம் தேதி அரசு அனுமதியின்றி அடியோடு வெட்டி உள்ளார். இது குறித்து 'கிரீன் கேர்' (Green Care) அமைப்பினரும் அப்பகுதி பொதுமக்களும் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் மாருதிபிரியா, சங்கர்லாலுக்கு ரூ.1,06,400 அபராதம் விதித்ததோடு, தனது சொந்த இடத்தில் 10 புதிய மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டார்.

இதேபோல குனியமுத்தூர் பகுதியில், 5 மரங்களின் கிளைகளை மட்டும் வெட்ட அனுமதி வாங்கி விட்டு, மரத்தின் பெரும் பகுதியை வெட்டிச் சாய்த்த தனியார் கடை உரிமையாளருக்குப் பேரூர் வட்டாட்சியர் ரூ.1,04,000 அபராதம் விதித்தார். 

இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு சம்பவங்களில் மொத்தம் ரூ.2,10,400 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக மரங்களை வெட்டினால் சில நூறுகள் அல்லது சிறிய தொகைகள் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டு வந்த நிலையில், அதிகாரிகள் எடுத்து உள்ள இந்த அதிரடி நடவடிக்கை மரம் வெட்டுவோருக்குச் சம்மட்டி அடியாக அமைந்து உள்ளது. 

இது குறித்துப் பேசிய 'கிரீன் கேர்' அமைப்பின் நிறுவனர் சையது, "இதுபோன்ற பெரிய தொகையை அபராதமாக விதிக்கும் போது தான் இயற்கை வளங்களை அழிப்பவர்கள் பயப்படுவார்கள். மேலும் பொது இடங்களில் மரங்களைச் சேதப்படுத்துபவர்கள் மீது காவல் துறையினரும் தனியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: