புதன், 22 ஜூலை, 2026

நெல்லை மாநகராட்சி மேயர் வீட்டிற்குள் புகுந்து கொலை மிரட்டல்; இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை !!!

SHARE

 நெல்லை மாநகராட்சி மேயர் வீட்டிற்குள் புகுந்து கொலை மிரட்டல்; இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை !!!

நெல்லை மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி டவுன் வேணு வனக்குமாரர் கோவில் தெருவில், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இல்லம் உள்ளது. அப்பகுதிக்கு திங்கட்கிழமை (ஜூலை 20) இரவு 8.50 மணிக்கு வந்த 2 அடையாளம் தெரியாத இளைஞர்கள், மேயர் வீட்டை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, மேயர் இல்லத்திற்குச் சென்ற அந்த நபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திரளாக மேயர் இல்லம் முன்பு கூடி, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து, மேயர் இல்லத்தில் பதிவான சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே, மேயரை மிரட்டிய அந்த நபர்கள் கூட்டத்திற்குள் புகுந்ததை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்து, அவர்களை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அவர்களை போலீஸிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது அப்சல், அப்துல் அஜிஸ் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், 44 ஏக்கர் நிலத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என பாளையங்கோட்டை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயரிடம் வலியுறுத்தியதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அதற்கு ‘அனுமதி வழங்க முடியாது’ என மேயர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக, மேயரை தாக்க ஆள் ஏவப்பட்டதா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, சட்டமன்ற உறுப்பினரான தி.மு.க மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் உடன், மேயருக்கு மோதல் போக்கு இருப்பதாக கூறப்படும் சூழலில், இந்த விவகாரம் போலீசார் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த தி.மு.க ஆட்சியில் ஆளுங்கட்சி மேயராக இருந்த சரவணனுக்கும், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. உள்கட்சி பூசல் உச்சக் கட்டத்திற்கு சென்ற நிலையில், மேயர் சரவணனை தி.மு.க தலைமை பதவி விலகச் செய்தது. அதன் பிறகு எளிமையான மனிதராக அறியப்பட்ட தற்போதைய மேயர் ராமகிருஷ்ணனை திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக தி.மு.க தலைமை அறிவித்தது.


மேயர் ஆவதற்கு முன்பு வரை இராமகிருஷ்ணன் சைக்கிளில், பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததால், இவரை ’சைக்கிள் மேயர்’ என்றும் மக்கள் அன்போடு அழைத்து வந்தனர். இந்நிலையில், மேயரை இரு இளைஞர்கள் தாக்க முற்பட்ட சம்பவம், கட்சியில் மீண்டும் உட்கட்சி பூசல் தலைதூக்குகிறதா என்ற கேள்வியை எழச் செய்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: