எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க வில் இணைய வற்புறுத்தினார்கள்; காவல் துறை மீது அனிதா ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டு !!!
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க வில் இணைய வற்புறுத்துவதாக தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ வுமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல் துறை மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த மாதம் 20-ம் தேதி (ஜூன் 20), தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய்யை ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் அவர் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் காவல் துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை தன்னை எந்த நேரத்திலும் கைது செய்ய நேரிடும் என்பதால், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து பேச வேண்டும். அதற்காக முதலமைச்சரை அவதூறாக பேசலாமா? எந்த முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது" எனக்கூறி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை இன்று (ஜூலை 03) காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அப்போது, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் த.வெ.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர், மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்,
"எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய சொல்லியும் த.வெ.க வில் இணைய வேண்டும் எனவும் காவல் துறையினர் வற்புறுத்தினர். ஆனால் அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. தி.மு.க வில் வலுவாக இருப்பேன். எவருக்கும் அடிபணிய மாட்டேன்" என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
மேலும், "என்னை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்) என்ன சொல்கின்றாரோ அதுதான் எங்களுடைய கட்டளை. நாங்கள் தி.மு.க வில் வலுவாக இருப்போம்" என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது, "போலீஸ் அராஜகம் ஒழிக" என்று அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

0 கருத்துகள்: