தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை !!!
மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாக துறையின் கீழ் செயல்படும் மாநகராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் என சுமார் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைந்த உடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் அருண் ஐ.பி.எஸ்.ஐ நியமித்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் உள்ள பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் தமிழ்நாட்டில் அதிக பண பரிவர்த்தனை நடைபெறும் துறைகள், மக்கள் சேவைகள் அதிகம் உள்ள துறைகள், ஆகிய அலுவலகங்களில் தொடர்ச்சியாக லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து உள்ளது. மேலும் கடந்த காலங்களில் இதே போன்று பண்டிகை நேரங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவது வழக்கம்.
ஆனால் தற்போது பண்டிகை காலங்கள் இல்லாமலேயே தொடர்ச்சியாக புகார்களின் அடிப்படையில் மக்கள் சேவைகள் அதிகம் உள்ள துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்சம் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தான் தமிழ்நாடு முழுவதும் நேற்று 40 மாநகராட்சி, நகராட்சி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் தூத்துக்குடி, நெல்லை, தாம்பரம், புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திருப்பத்தூர், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
மேலும் முழுமையான சோதனைக்கு பிறகே கணக்கில் வராத பணம், முறைகேடான ஆவணங்கள், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பற்றப்படும் என்றும், அதன் பிறகே அது குறித்த தகவல் வெளியிடப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: