புதன், 29 ஜூலை, 2026

“கேட்டை திறந்து உள்ளே போயிட்டு... அம்புட்டு நாகரிகமா வெளியவும் வந்திடுச்சு” ; கோவையில் வீட்டின் கேட்டைத் திறந்து புகுந்த ஒற்றை யானை - சி.சி.டி.வி காட்சி வைரல் !!!

SHARE

 “கேட்டை திறந்து உள்ளே போயிட்டு... அம்புட்டு நாகரிகமா வெளியவும் வந்திடுச்சு” ; கோவையில் வீட்டின் கேட்டைத் திறந்து புகுந்த ஒற்றை யானை - சி.சி.டி.வி காட்சி வைரல் !!!

பெரிய தடாகம் பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய சுவாரஸ்யம்: தீவனத்தைத் தேடி வந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் !!!

 கோவை, பெரிய தடாகம் பகுதியில் வீட்டின் இரும்புக் கேட்டை ஒரு மனிதனைப் போல லாவகமாகத் திறந்து உள்ளே சென்று, தீவனங்களைத் தேடி விட்டு மீண்டும் அதே கேட் வழியாக வெளியேறிய ஒற்றைக் காட்டு யானையின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகிப் பெருத்த ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக் காலமாக உணவிற்கும் தண்ணீருக்கும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாகப் பெரிய தடாகம் மற்றும் அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஒற்றைக் காட்டு யானை ஒன்று தீவிரமாக உலா வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், அதிகாலை பெரிய தடாகம் - குட்டைவழி செல்லும் சாலையில் உலா வந்த அந்த ஒற்றைக் காட்டு யானை, அங்கு இருந்த ஒரு வீட்டின் முன்பகுதிக்கு வந்துள்ளது. அங்கு வைக்கப்பட்டு இருந்த கால்நடைத் தீவனத்தின் வாசனை பிடித்து வந்த அந்த யானை, வீட்டின் பூட்டப்படாத வெளிப்பக்க இரும்புக் கேட்டைத் தனது துதிக்கையால் மிக லாவகமாகத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே சென்று உள்ளது.

உள்ளே தீவனம் ஏதும் கிடைக்காத நிலையில், எந்தப் பொருளையும் சேதப்படுத்தாமல் மீண்டும் தான் வந்த அதே கேட் வழியாக அமைதியாக வெளியேறி உள்ளது.

 இந்த அசாத்தியக் காட்சிகள் அங்ருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 

யானை மிகவும் நாகரிகமாக கேட்டைத் திறந்து சென்று வந்த போதிலும், குடியிருப்பு பகுதிக்குள் அச்சமின்றி யானைகள் நடமாடுவதால் வனத்துறையினர் அதனைக் காட்டுக்குள் விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தடாகம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: