லாரிகளில் தொடர்ந்து டீசல் திருட்டு - கேமராவுடன் சென்று கையும் களவுமாக பிடித்த லாரி உரிமையாளர் !!!
தருமபுரி அருகே லாரிகளில் தொடர்ந்து டீசல் திருடப்படுவதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து, லாரி உரிமையாளர் கேமராவுடன் லாரியை பின்தொடர்ந்து சென்று டீசல் திருட்டை கையில், களவுமாக பிடித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரிகளை வைத்து, இந்தியா முழுவதும் பலவகையாக சரக்குகளை அனுப்பி வருகிறார்.
இந்நிலையில் அவரின் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக செல்லும் லாரிகளில் மட்டும் டீசல் அளவு விரைவாக குறைவதை கண்டறந்து உள்ளார். லாரிகளில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ் கருவிகளை ஆய்வு செய்தால், தருமபுரிக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடைப்பட்ட பகுதியில் லாரி மணிக் கணக்கில் நின்று செல்வது தெரியவந்து உள்ளது.
இதனால் கடந்த மே மாதம் முதலே லாரி உரிமையாளர் சோமசுந்தரத்திற்கு, லாரி ஓட்டுநர்கள் மீது சந்தேகம் எழுந்து உள்ளது. இதுகுறித்து லாரி ஓட்டுநர்களிடம் அவர் கேட்டால், லாரி ஒரு லிட்டர் டீசலுக்கு மூன்று கிலோ மீட்டர் வரை தான் மைலேஜ் கொடுப்பதாக தெரிவித்து உள்ளனர். ஆனால், புதிய லாரிகளில் ஒரு லிட்டருக்கு 5 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும் என்பதால் சோமசுந்தரத்திற்கு சந்தேகம் வலுத்தது.
இதை அடுத்து, சோமசுந்தரம் தேங்காய் எண்ணெய் ஏற்றி சென்ற ஒரு லாரியை, லாரி ஓட்டுநருக்குத் தெரியாமல் வீடியோ கிராபருடன் காரில் பின் தொடர்ந்து சென்று உள்ளார். பெரியாம்பட்டி மேம்பாலம் அருகே சாலையோரம் லாரி நின்று உள்ளது. அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த சோமசுந்தரம் சிறிது தூரம் முன்பாக காரை நிறுத்தி விட்டு என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனித்தார்.
அப்போது, அருகில் உள்ள ஒரு ஓலைக்கொட்டகையில் இருந்து ஒருவர் டீசல் கேன் மற்றும் குழாயுடன் வந்து லாரிக்கு அருகில் வைத்தார். லாரி ஓட்டுநர் அரவிந்தன் டீசல் டேங்க்கை கழற்றினார். அந்த டேங்கில் டியூபை வைத்து சுமார் 10 லிட்டர் அளவுக்கு டீசலை எடுத்தனர். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சோமசுந்தரம், டீசல் எடுப்பதை வீடியோ எடுத்ததுடன், லாரி ஓட்டுநரையும் டீசலை திருடியவரையும் கையும், களவுமாக பிடித்து விசாரித்து உள்ளார்.
அதற்கு லாரி ஓட்டுநர் தொலைபேசியில் அழைத்து சொன்னதால் தான், வந்து டீசல் எடுத்துக் கொடுத்தேன் என்று டீசல் திருடியவர் தெரிவித்தார். லாரி ஓட்டுநரிடம் சோமசுந்தரம் பேசிக் கொண்டு இருந்த போது, டீசல் திருடியவர் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார். இதை அடுத்து, லாரி ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் டீசல் திருடியவர் மீது காரிமங்கலம் காவல் நிலையத்தில் சோமசுந்தரம் புகார் அளித்து உள்ளார்.
தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வரை இதுபோன்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஓலை கொட்டகை அமைத்து, லாரி ஓட்டுநர்கள் உதவியுடன் பலர் டீசல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக லாரி உரிமையாளர் சோமசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
டீசல் திருட்டை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காகவே பவானியில் இருந்து தனது லாரியை பின்தொடர்ந்து வந்ததாக அவர் தெரிவித்தார். இந்த டீசல் திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்

0 கருத்துகள்: