மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடிதான் 'அம்பயர்' - மாணிக்கம் தாகூர் !!!
மேகதாது அணை விவகாரத்தில் அம்பயரே பிரதமர் நரேந்திர மோடி தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அவரது உருவத்துடன் கூடிய மணல் சிற்பத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் கஜேந்திரன் ஏழுமலையான் வடிவமைத்த காமராஜர் மணல் சிற்பத்தை மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார்.
காமராஜர் சிற்பத்தின் கீழே 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. இந்த வாசகத்தை தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில்,
"பெருந்தலைவர் காமராஜரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று பள்ளிக் கூடங்கள். அப்படிப்பட்ட பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள், தேவையில்லாத ஆய்வுகள், சினிமா நிகழ்ச்சிகள் இனி நடைபெறக் கூடாது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை தடை விதித்து இருப்பதை வரவேற்கிறோம்" என அவர் கூறினார்.
அப்போது, சில அரசு பள்ளிகள் மூடப்படுவதாக சொல்லப்படுகிறதே என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர்,
"ஒவ்வொரு பள்ளியையும் உருவாக்குவதற்கு காமராஜர் பட்ட கஷ்டத்தையும், துன்பத்தையும் நாங்கள் நன்றாக அறிவோம். எனவே, எந்த ஒரு பள்ளி மூடப்பட்டாலும் அதை நான் துக்க தினமாகவே பார்க்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, "ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் த.வெ.க ஆட்சி முடிந்துவிடும் என்று ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறாரே" என நிருபர்கள் கேட்டனர். அதற்கு,
"இன்னும் ராஜேந்திர பாலாஜி அடங்கவில்லையா? எத்தனை முறை தோற்றாலும் அவர் அடங்கமாட்டார்" எனத் தெரிவித்தார்.
அண்ணாமலை பற்றிய கேள்விக்கு,
"ஆர்.எஸ்.எஸ் என்பதன் தமிழாக்கம் தான் அண்ணாமலை தற்போது செய்யக் கூடிய அரசியல். அது மிக ஆபத்தான அரசியல்" என மாணிக்கம் தாகூர் பதிலளித்தார்.
தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்திற்கு லயோலா மணி தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு,
"இது முதலமைச்சரின் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது" என அவர் தெரிவித்தார்.
'மேகதாது விவகாரத்தில் மோடி தான் அம்பயர்'
தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், "மேகதாது விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாடு மிகத் தெளிவானதாக உள்ளது. மேகதாது அணை என்பது தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனை. இது விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவிடும்.
எனவே, தமிழக அரசின் சம்மதம் இல்லாமல், மத்திய அரசு இந்த விஷயத்தில் ஒப்புதல் கொடுக்கக் கூடாது. தமிழ்நாடு, கர்நாடகா, பிரதமர் மோடி ஆகிய 3 பேர் சம்பந்தப்பட்டது தான் மேகதாது விவகாரம் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தான் அம்பயர். அவரது அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது. எனவே, மோடியின் அனுமதியை பெறுவதற்காக கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க வுக்கு ஒரே ஒரு சீட் மட்டுமே கிடைத்ததால், மோடியும், அமித்ஷாவும் கோபத்தில் இருக்கிறார்கள்.
மோடிக்கும் அமித்ஷாவுக்கும் பயங்கரமான கோபத்தில் இருக்கிறார்கள். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பெயர் அடிபட்டாலும், மோடி அனுமதியில்லாமல் அணையை கட்ட முடியாது. அதை செய்வது மோடி தான் என்பதை மறந்து விடக் கூடாது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கின்ற நியாயமான உரிமையை பறித்து விடக்கூடாது. மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட வைக்கக் கூடாது என்பது தான் தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாடு. தமிழகத்தின் உரிமையை காக்க தொடர்ந்து போராடுவோம்" என மாணிக்கம் தாகூர் கூறினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.வி.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் வசந்த், அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: