புதன், 15 ஜூலை, 2026

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி - அரசகுமாருக்கு எதிராக குவியும் புகார்கள் !!!

SHARE

 தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி - அரசகுமாருக்கு எதிராக குவியும் புகார்கள் !!!

தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைதான அரசகுமாருக்கு எதிராக, இதுவரை 59 பள்ளிகளின் சார்பில் புகாரளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை சாலி கிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்த அரசகுமார், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித்தரம் உயர்வு, டDTCP மற்றும் CMDA திட்ட அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை எளிதாக பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து கோடிக் கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், உறுதி அளித்தபடி எந்த அனுமதியையும் பெற்றுத் தராததுடன், வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அரசகுமார் ஏமாற்றி வந்து உள்ளார்.

இந்நிலையில், அவர் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசகுமாரை ஜூன் மாத இறுதியில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த மோசடி தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 59 தனியார் பள்ளிகளிடம் இருந்து மத்திய குற்றப் பிரிவுக்கு புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். 59 பள்ளிகள் அளித்து உள்ள புகார்களில் மட்டும் 7 கோடியே 34 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

போலீசாரின் விசாரணையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலமாக பல கோடி ரூபாயை அரசகுமார் பெற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதை அடுத்து, கைது செய்யப்பட்ட அரசகுமாரின் 24 வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. மேலும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் எங்கெங்கு சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் முத்துக்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் அரசகுமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்து, புகார் அளிக்காத பள்ளி நிர்வாகிகளின் விவரங்களையும் திரட்டும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: