குடி போதையில் தகராறு கட்டிடத் தொழிலாளி அடித்துக் கொலை - கோவையில் வாலிபர் கைது !!!
கோவை கட்டிடத் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.கோவை, கவுண்டம்பாளையம் அருகே டி.வி.எஸ் நகர் பகுதியில் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணிகள் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேசன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த குணசேகரன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு அருகிலே கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். அங்கு நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன், குணசேகரன் ஆகியோர் ஒன்றாக மது குடித்து உள்ளனர். அப்பொழுது அவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை, ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.
இதில் குணசேகரன் அங்கு இருந்த பைப், உள்ளிட்டவற்றை எடுத்து வெங்கடேசன் அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். மேலும் இந்த மோதல் குறித்து கட்டிட வேலை வழங்கியவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் செல்போன் மூலம் பேசி வெங்கடேசன் குணசேகரன் ஆகிய இருவரை கண்டித்து உள்ளார்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை குணசேகரன் உள்ளிட்ட சகத் தொழிலாளர்கள் எழுந்து வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டனர். ஆனால் வெங்கடேசன் எழுந்து வரவில்லை, அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தபடி இருந்தது. உடனே அவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதனை செய்த போது வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்து கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து வெங்கடேசன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்து குணசேகரனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்: