புதன், 8 ஜூலை, 2026

பிள்ளைகள் வாங்கிய சட்டம்... பெற்றோருக்குத் தரைதான் மிச்சம்” ; கோவை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவலம் - இருக்கை இல்லாமல் மண் தரையில் அமர்ந்த பெற்றோர், த.வெ.க கொடி சர்ச்சையால் பரபரப்பு !!!

SHARE

 பிள்ளைகள் வாங்கிய சட்டம்... பெற்றோருக்குத் தரைதான் மிச்சம்” ; கோவை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவலம் - இருக்கை இல்லாமல் மண் தரையில் அமர்ந்த பெற்றோர், த.வெ.க கொடி சர்ச்சையால் பரபரப்பு !!!

 கோவை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெறும் தங்கள் பிள்ளைகளைக் காண ஆவலோடு வந்த பெற்றோர்களுக்குக் குறைந்தபட்ச இருக்கை வசதி கூட செய்து தராததால், அவர்கள் வெட்டவெளியில் மண் தரையில் அமர வைக்கப்பட்ட அவலச் சம்பவம் பலரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. அத்துடன், விழாவில் ‘த.வெ.க’ கொடி வண்ணப் பின்னணி மற்றும் ‘புலி உருமுது’ பாடல் முழக்கம் எனப் பல்வேறு சர்ச்சைகளும் அரங்கேறி உள்ளன.

கோவை, மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் 3-வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (08.07.2026) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், சிறப்பு விருந்தினர்களாக உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா, தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாரதிதாசன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் மற்றும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தர் கௌரி ரமேஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் சுமார் 800 மாணவ, மாணவிகளுக்குச் சட்டப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

​வழக்கமாகக் கல்லூரி பட்டமளிப்பு விழாக்களுக்கு வரும் பெற்றோர்கள் தங்கி, நிகழ்ச்சியைக் காணத் தனியே பந்தல் அமைத்து, இருக்கைகள் (Chairs) போட்டு எல்.இ.டி (LED) திரைகள் வைப்பது தான் மரபு. ஆனால், கோவை சட்டக் கல்லூரி நிர்வாகம், சிறப்பு விருந்தினர்களைக் கவனிப்பதில் காட்டிய ஆர்வத்தைப் பெற்றோர்களுக்கு வசதி செய்து தருவதில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

​பல்வேறு ஊர்களில் இருந்து ஆசையோடு வந்த பெற்றோருக்குப் போதிய இருக்கைகள் கூடப் போடப்படவில்லை. இதனால், நிகழ்ச்சி நடந்த அரங்கிற்கு வெளியே திறந்தவெளி மண் தரையில் வயதான பெற்றோர்களும், பெண்களும் அமர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

​அரங்கிற்கு வெளியே இரண்டு எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டு இருந்தும், அமர நாற்காலிகள் இல்லாததால் பெற்றோர் தரையிலேயே அமர்ந்து தங்களது பிள்ளைகள் பட்டம் பெறுவதைப் பார்த்தனர். சிலர் தங்களது கைக்குழந்தைகளைத் தரையில் அமர வைத்தும், ஒரு சில பெற்றோர் வெயில் தாங்காமல் தங்களது குழந்தைகளை அங்கு இருந்த மரங்களில் துணியால் தொட்டில் கட்டித் தாலாட்டியபடியும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

​இந்த இருக்கை அவலத்திற்கு இடையே, விழாக் குழுவினர் மேடையில் அமைத்து இருந்த ‘பேக்டிராப்’ (Backdrop) பின்னணித் திரை பெரும் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியது.

 அது, சமீபத்தில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கொடி வண்ணமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கலவையில் அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

​“அரசு விழாவில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொடி வண்ணத்தில் எப்படிப் பின்னணித் திரை அமைக்கலாம் ?” என அங்கு இருந்த மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

 நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கல்லூரி நிர்வாகம், உடனடியாக அந்தப் பேக்டிராப்பை மேடையில் இருந்து அவசர அவசரமாக நீக்கியது.

​இதுமட்டுமன்றி, பட்டமளிப்பு விழாவிற்கு வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்கக் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் (Band Music) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ​அப்போது, ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் வரும் பிரபல குத்துப் பாடலான “புலி உருமுது... புலி உருமுது...” என்ற பாடலை பேண்ட் வாத்தியக் குழுவினர் அதிரடியாக வாசித்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வரும் போது, அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத சினிமா குத்துப் பாடலை வாசித்துக் கல்லூரி நிர்வாகம் வரவேற்றது அங்கு இருந்த மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

​“கஷ்டப்பட்டுத் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்து, அவர்கள் வழக்கறிஞராகப் பட்டம் பெறுவதை கம்பீரமாகப் பார்க்க வந்த பெற்றோர்களை இப்படி மண் தரையில் அமர வைத்து அவமதித்தது. எனப் பட்டமளிப்பு விழாவுக்கு வந்த சமூக ஆர்வலர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: