காதல் திருமணம் செய்த 1 1/2 தீயணைப்பு வீரர் தூக்கு போட்டு தற்கொலை - காரணம் என்ன காவல்துறை விசாரணை ?
கோவையில் காதல் திருமணம் செய்து 1 1/2 மாதத்தில் தீயணைப்பு வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த அழகேசன். இவர் கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 1 1/2 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. தான் காதலித்து வந்த இளம் பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் தனது மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டு, விட்டு கோவைக்கு பணிக்காக திரும்பினார். மேலும் தனது மனைவியுடன் வசிக்க வாடகைக்கு வீடு பார்த்து வந்தார்.
கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. அந்த வீட்டில் அழகேசன் தங்கி இருந்தார். ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு சென்று மனைவியை கோவைக்கு அழைத்து வர திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அழகேசன் தங்கி இருந்த வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை, அத்துடன் அழகேசன் மனைவி அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதை அடுத்து அவருடன் வேலை செய்து வரும் சக ஊழியர்கள் அந்த வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினர். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்பொழுது மின் விசிறியில் அழகேசன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், உடனே அழகேசனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அழகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் வழக்கு பதிவு செய்து தீயணைப்பு வீரர் தற்கொலை செய்ய குடும்ப பிரச்சினை காரணமா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தீயணைப்பு நிலைய ஊழியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: