புதன், 19 ஆகஸ்ட், 2026

"அவன் யாரென்றே தெரியாது" ; கோவையில் 4-ம் ஆண்டு கல்லூரி மாணவரைத் தாக்கிய ஜூனியர் மாணவர் - போலீஸ் விசாரணை !!!

SHARE

 "அவன் யாரென்றே தெரியாது" ; கோவையில் 4-ம் ஆண்டு கல்லூரி மாணவரைத் தாக்கிய ஜூனியர் மாணவர் - போலீஸ் விசாரணை !!!

வழி மறித்து ஆபாசமாகப் பேசித் தாக்குதல்: கல்லூரி மாணவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு !

​ கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், செட்டிபாளையம் அருகே 4-ம் ஆண்டு பயிலும் பார்மசி கல்லூரி மாணவரை, ஜூனியர் மாணவர் ஒருவர் வழிமறித்துத் தாக்கிய சம்பவம் மீண்டும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் உதயராஜ் (22). இவர் கோவை செட்டிபாளையம் அருகே மயிலேறிபாளையத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் B.Pharm 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக ஒத்தக்கால்மண்டபம் அருகே வேலாந்தாவளம் சாலையில் சக மாணவர்களுடன் அறை எடுத்துத் தங்கிப் படித்து வருகிறார்.

​சம்பவத்தன்று, உதயராஜ் ஒத்தக்கால்மண்டபம் சூப்பர் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் உதயராஜை அருகில் வருமாறு அழைத்து உள்ளார். ஆனால், அந்த வாலிபர் யார் ? என்று தெரியாததால் உதயராஜ் அருகே செல்லாமல் தொடர்ந்து நடந்து சென்று உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், உடனடியாகத் தனது மோட்டார் சைக்கிளை உதயராஜின் குறுக்கே நிறுத்தி, அவரை ஆபாச வார்த்தைகளால் அவதூறாகப் பேசி திடீரெனத் தாக்கி உள்ளார். இதில் உதயராஜின் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

இச்சம்பவம் குறித்து உதயராஜ் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

​விசாரணையில், உதயராஜைத் தாக்கியவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிவர்மன் (18) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் B.Sc IT 2-ம் ஆண்டு (ஜூனியர்) படித்து வருகிறார்.

​முன் பின் அறியாத சீனியர் மாணவரை வழிமறித்துத் தாக்கிய ஜூனியர் மாணவர் கவிவர்மன் மீது செட்டிபாளையம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: