செல்போன் செயலி மூலம் பழகி ஐ.டி ஊழியரை காரில் கடத்தி நகை - பணம் பறிப்பு ; கோவையில் 4 பேர் கைது !!!
கோவை அருகே செல்போன் செயலி மூலம் பழகி ஐ.டி ஊழியரை காரில் கடத்தி நகை - பணம் பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை அடுத்த சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள தியாகராஜன் நகரை சேர்ந்தவர் சஞ்சய். என்ஜினியரிங் இவர் கோவையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் செல்போனில் கிரைண்டர் என்ற செயலியை பதிவிறக்கம் செய்தார். அந்த செயலி மூலம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்விக் என்ற செல்வம் அறிமுகமானார். அவர்கள் நன்றாக பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். பின்னர் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அப்பொழுது அத்விக் தான் கார் வைத்து இருப்பதாகவும், எந்த இடத்துக்கு வர வேண்டும் என்று கூறினால், அங்கு வருவதாகவும் சஞ்சயிடம் கூறினார். உடனே சஞ்சய் சுண்டக்காமுத்தூர் அருகே வருமாறு கூறினார். அதன்படி அங்கு சஞ்சய் காத்து இருந்தார். அப்பொழுது ஒரு கார் வேகமாக வந்து அருகில் நின்றது. காரை ஓட்டிய நபர் நான் தான் ஆத்விக் என்று கூறியதுடன் காரில் ஏறுங்கள் என்று கூறினார். அந்தக் காருக்குள் மேலும் 3 பேர் இருந்தனர். அதை பார்த்ததும் அவர்கள் யார் ? என்று சஞ்சய் கேட்டார். அதற்கு அவர் அந்த மூன்று பேரும் தனது நண்பர்கள் தான் என்று கூறினார். எனினும் அந்த காருக்குள் சஞ்சய் தயங்கியபடி ஏறினார். பின்னர் அவர்கள் சஞ்சயை கடத்திச் சென்றனர். அந்த கார் சிறுவாணி சாலை சென்றது. காருக்குள் இருந்த மூன்று பேரும் சஞ்சய் சரமாரியாக தாக்கியதுடன், சத்தம் போட்டால், கொன்று விடுவோம் என்று மிரட்டினர். தொடர்ந்து அவர் அணிந்து இருந்த தங்கச்செயின், இரண்டு தங்க மோதிரம் மற்றும் அவரிடம் இருந்து ரூபாய் ஐந்தாயிரம் ஆகியவற்றை பறித்து விட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பி சென்றனர். அந்த நகை - பணம் மதிப்பு ரூபாய் 1.5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சஞ்சய் பேரூர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சஞ்சயிடம் பணம் பறித்தது நெல்லையைச் சேர்ந்த ஆத்விக் அவரது நண்பர்களான சக்தி, விஜய் ராம், சுந்தர், சுடலைமணி என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து பேரூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

0 கருத்துகள்: