புதன், 5 ஆகஸ்ட், 2026

சாலையோரம் மேய்ந்த யானைகளிடம் வம்பு இழுத்த நபர் ; ஆவேசமாகப் பாய்ந்த காட்டு யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரல் - கடுமையாக நடவடிக்கை எடுக்கச் சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு !!!

SHARE

சாலையோரம் மேய்ந்த யானைகளிடம் வம்பு இழுத்த நபர் ; ஆவேசமாகப் பாய்ந்த காட்டு யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரல் - கடுமையாக நடவடிக்கை எடுக்கச் சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு !!!


கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த ஆழியார் - வால்பாறை சாலையில், மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்த காட்டு யானைக் கூட்டத்தின் அருகே சென்று ஆபத்தான முறையில் யானைகளை மிரட்டிய நபர் மீது, யானை ஆவேசமாகப் பாய்ந்து தாக்க முயன்ற திடுக்கிடும் வீடியோ வெளியாகிச் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. 

​கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் - வால்பாறை மலைப் பாதையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாகச் சாலையோரங்களில் நின்று மேய்ச்சலில் ஈடுபடுவதும், பின்னர் ஆழியார் அணைக்குச் சென்று நீர் அருந்துவதும் தொடர் கதையாக உள்ளது. 

இந்தச் சூழலில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் யானைகளைக் கண்டால் பாதுகாப்பாக விலகிச் செல்லுமாறு வனத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆழியார் - வால்பாறை சாலையோரத்தில் யானைக் கூட்டம் ஒன்று அமைதியாக மேய்ந்து கொண்டு இருந்த போது, அங்கே வந்த மர்ம நபர் ஒருவர், ஆபத்தை உணராமல் யானைக் கூட்டத்தின் மிக அருகில் சென்று அதனை மிரட்டுவது போல் சைகைகள் செய்து உள்ளார்.

​இதைக் கண்டு கடும் கோபம் அடைந்த காட்டு யானை ஒன்று, திடீரென ஆவேசம் அடைந்து அவரை நோக்கி அதிவேகமாகத் தாக்கப் பாய்ந்து வந்தது. 

யானை கோபத்துடன் பாய்வதைக் கண்டு பதறிப்போன அந்த நபர், அலறி அடித்துக் கொண்டு பின்நோக்கி ஓடினார். உடனடியாக அங்கு இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவரை ஆபத்தில் இருந்து மீட்டுக் கையைப் பிடித்து இழுத்துச் சென்றதால், நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார்.

அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்த இந்த காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​இதுகுறித்துச் சமூக ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பிரியர்கள் வேதனையுடன் கூறுகையில், 

"வனவிலங்குகளைத் தேவையின்றி வம்புக்கு இழுப்பதும், அத்துமீறி அருகில் செல்வதும் மனித-விலங்கு மோதலுக்குப் பிரதான காரணமாக அமைகிறது.

 இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் நபர்கள் மீது வனத்துறை சட்டப்படி கடுமையான வழக்குகளைப் பதிவு செய்து, அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும்" என வலியுறுத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: