"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!
18-வது ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான போட்டிகள் தொடக்கம் : கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உற்சாகம்!
மது மற்றும் புகையிலையைக் காட்டிலும் தற்காலக் குழந்தைகளுக்கு மொபைல் போன்களின் பயன்பாடே மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது என ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்து உள்ளார்.
18-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்:
கிராமப்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஈஷா சார்பில் 18-வது ஆண்டாக 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் நடைபெறும் இப்போட்டிகளில் ஆண்களுக்கு வாலிபால் மற்றும் பெண்களுக்குத் த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான போட்டிகள் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்து உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.
எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் பேச்சு:
இப்போட்டிகளைக் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் முறைப்படி தொடங்கி வைத்துப் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பெண்களின் பெருமை:
"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே பேரழகு மற்றும் திறமைமிக்கவர்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்."
கிராமப்புறத் திறமைகள்:
கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
மொபைல் போன் ஆபத்து:
தொழில்நுட்பமும் அறிவியலும் எந்த அளவிற்கு அதிவேகமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவிற்கு மக்களின் உடல்நலக் குறைபாடுகளும் அதிகரித்து வருகின்றன. தற்போதைய குழந்தைகள் காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரை மொபைல் போன்களிலேயே மூழ்கி இருக்கின்றனர்.
ஆல்கஹால் மற்றும் புகையிலையைக் காட்டிலும் இந்த மொபைல் போன் அடிமைத்தனம் மிகவும் ஆபத்தானது.
விளையாட்டின் அவசியம்:
நவீன உலகில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு உடற்பயிற்சியோ விளையாட்டோ கிடைப்பதில்லை. ஈஷா போன்ற அமைப்புகள் இது போன்ற போட்டிகளை ஒருங்கிணைக்கும் போது இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். பள்ளிகளில் தினமும் கட்டாயம் ஒரு மணி நேரம் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனச் சட்டமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
10 மாநிலங்களில் முதற்கட்டப் போட்டிகள் நிறைவடைந்த பின், இதன் பிரம்மாண்ட இறுதிப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஈஷாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: