வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

அரசுப் பள்ளியில் அதிர்ச்சி : வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் அதிரடி இடமாற்றம் !!!

SHARE

 அரசுப் பள்ளியில் அதிர்ச்சி : வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் அதிரடி இடமாற்றம் !!!

போதை சாக்லேட் விநியோகிக்கப்படுவதாகவும் புகார்: பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி !!!

​ கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அரசுப் பள்ளியில், சீருடையில் இருந்த மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தக்கலை அரசுப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் இரு மாணவிகள் வகுப்பறையில் வைத்து மது அருந்தியதாகப் புகார் எழுந்தது. ஆனால், அப்போது பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் அளித்த அந்த மாணவிகள், "இந்தச் சம்பவம் பள்ளியில் நடக்கவில்லை, வீட்டில் தான் நடந்தது" என்று கடிதம் எழுதிக் கொடுத்து உள்ளனர். அதனை நம்பி பள்ளி நிர்வாகமும் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வழக்கை முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவிகள் பள்ளிச் சீருடையுடன் வகுப்பறையிலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் நேற்று இரவு சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவியது. இதன் மூலம் இந்தச் சம்பவம் பள்ளி வளாகத்திற்குள் தான் நடைபெற்றது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டது.

​பள்ளி வளாகத்திற்குள் நடந்த இந்தச் சம்பவத்தை முறையாக விசாரிக்காமல் மறைக்க முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் உடனடி நடவடிக்கை எடுத்து உள்ளார். 

அதன்படி, சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இதுமட்டுமின்றி, அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் சக மாணவர்களுக்குப் 'போதை சாக்லேட்' விநியோகம் செய்து வருவதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

​பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் இதுபோன்று போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதும், வகுப்பறையிலேயே மது அருந்தும் கலாச்சாரம் ஊடுருவி இருப்பதும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


 போதைப் பொருட்களைப் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: