திங்கள், 24 ஆகஸ்ட், 2026

மருத்துவர் பரிந்துரை இன்றி ஊக்க மருந்து விற்பனை - கோவை ஜிம் பயிற்சியாளர் உட்பட இருவர் கைது!

SHARE

 மருத்துவர் பரிந்துரை இன்றி ஊக்க மருந்து விற்பனை - கோவை ஜிம் பயிற்சியாளர் உட்பட இருவர் கைது!

சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1747 ஊக்க மருந்து பாட்டில்கள்,மோட்டார் பைக் பறிமுதல். 


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் மருத்துவர் பரிந்துரை இன்றி மருத்துவ உபயோகத்திற்கான மருந்துகள் கடத்தி வரப்படுவதாக கோவை எஸ்.பி பவன்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், எஸ்.ஐ சரத்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் அறிவொளி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த மோட்டார மோட்டார் பைக்கை நிறுத்தி சோதனையிட்டதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் அவர்கள் கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் அருண் பார்த்திபன்(28) என்பதும்,அதே பகுதியை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ரத்தின ஹரி(27) என்பதும்,உடற்பயிற்சி செய்தால் சோர்வு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஊக்க மருந்து பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும், மருத்துவ உபயோகத்திற்காக ஆபரேஷன் தியேட்டரில் ரத்த இழப்பு ஏற்பட்டால் அதனை தடுக்க பயன்படுத்தும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி டெல்லியில் இருந்து ஆன்லைன் மூலம் பெற்று கோவை மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி நிலையங்களுக்கு ஆர்டரின் பேரில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இந்த மருந்துகளை உடற்பயிற்சியின் போது உடல் சோர்வை போக்கும் மருந்துகளாக பயன்படுத்த விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து இருவர் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படியும்,பிஎன்எஸ் சட்டப்படியும் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும்,அவர்களிடம் இருந்து 10 மில்லி அளவுள்ள 1747 ஊக்க மருந்து பாட்டில்களையும்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஊக்க மருந்துகளின் மதிப்பு தோராயமாக ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூறுகையில்

 "உடற்பயிற்சி நிலையம் நடத்துபவர்கள்,உடற்பயிற்சி கூடத்திற்கு செல்பவர்கள் முறையான மருத்துவர் பரிந்துரையின்றி இதுபோன்ற ஊக்க மருந்துகளை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இச்செயல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளதோடு, தற்போது பிடிபட்டு உள்ள மருந்துகளின் மருந்து நிறுவனங்கள் குறித்தும், பிடிபட்ட செல்போன்களில் உள்ள தொடர்பு எண்களையும் கைப்பற்றி அதனையும் முழுமையாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.


SHARE

Author: verified_user

0 கருத்துகள்: