"ஒடிசாவில் இருந்து பேருந்தில் வந்த கஞ்சா சாக்லேட்டுகள்" ; கோவையில் வடமாநில ஆசாமிகள் கைது : போலீஸ் அதிரடி!
3.170 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்!
கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்த கருமத்தம்பட்டி போலீஸார், ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் உட்பட 3 பேரைக் கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
தன் தொடர்ச்சியாக, கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ராகேஷ் (22) என்பவரிடம் நடத்திய சோதனையில் 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ராகேஷிடம் நடத்திய விசாரணையில், கரிச்சிபாளையம் பகுதியில் பாதுகாவலராகப் பணியாற்றிய போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முன்னா சௌத்ரி என்பவரிடம் கஞ்சா வாங்கியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, முன்னா சௌத்ரியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த ஒடிசாவைச் சேர்ந்த லிபுன் நாக் (29) என்பவரைப் பிடித்துச் சோதனையிட்டதில், அவரிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சொந்த ஊரான ஒடிசாவிற்குச் சென்று திரும்பிய முன்னா சௌத்ரி, இக்கஞ்சாவைத் தன்னிடம் கொடுத்துச் சென்றதாக லிபுன் நாக் தெரிவித்தார்.
உடனடியாகச் சைபர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் முன்னா சௌத்ரியின் இருப்பிடத்தைக் போலீஸார் கண்காணித்தனர். ஒடிசாவில் இருந்து கோவை வழியாகத் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்தை மடக்கிச் சோதனையிட்டனர்.
அப்போது பேருந்தில் பயணித்த முன்னா சௌத்ரியைப் (27) பிடித்துச் சோதனையிட்ட போது, அவரது பையில் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் மொத்தம் 3.170 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய 3 நபர்களும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல்துறை எச்சரித்து உள்ளது.

0 கருத்துகள்: