ஐபோனைத் திருடிச் சென்ற இளம்பெண் ; வீடியோ வைரலானதும் மீண்டும் கடையில் ஒப்படைப்பு !!!
"குடும்ப சூழ்நிலையால் திருடி விட்டேன்": புகார் அளிக்காமல் மன்னித்து ஏற்றுக் கொண்ட கடை உரிமையாளர் !!!
கோவையில் கடையில் ஐபோனைத் திருடிச் சென்ற இளம்பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண் மீண்டும் அதே கடைக்கு வந்து போனைத் திருப்பி ஒப்படைத்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் எதிரே பிரசாந்த் என்பவர் 'ஆஞ்சநேயா' என்ற பெயரில் செல்போன் கடை நடத்தி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இக்கடைக்கு வந்த இளம் பெண் ஒருவர், செல்போன் வாங்குவது போல நடித்து அங்கு இருந்த மேசையின் மீது வைக்கப்பட்டு இருந்த ‘ஐபோன் 13’ (iPhone 13) போனை நைஸாக எடுத்துத் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்துத் திருடிச் சென்றார்.
இளம்பெண் ஐபோனைத் திருடிச் செல்லும் இந்த சி.சி.டி.வி காட்சிகள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பரவி வைரலானது.
இந்நிலையில், தனது திருட்டு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அம்பலமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், மீண்டும் காந்திபுரத்தில் உள்ள அதே செல்போன் கடைக்கு நேரில் வந்து உள்ளார்.
கடை உரிமையாளரிடம் தனது தவறுக்குக் கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்த அந்தப் பெண், "குடும்பச் சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு செய்து விட்டேன்" எனக் கூறி மன்னிப்புக் கேட்டுத் திருடிய ஐபோனை மீண்டும் அவரிடமே ஒப்படைத்து உள்ளார்.
இளம்பெண் தனது தவறை உணர்ந்து போனைத் திருப்பித் தந்ததாலும், குடும்பச் சூழ்நிலையைக் காரண கூறியதாலும் நெகிழ்ந்த கடை உரிமையாளர் பிரசாந்த், போலீசில் புகார் எதுவும் அளிக்காமல் போனை மட்டும் பெற்றுக் கொண்டு அவரை மன்னித்து அனுப்பி வைத்தார்.
தற்போது அந்தப் பெண் கடையில் ஐபோனை மீண்டும் ஒப்படைக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

0 கருத்துகள்: