சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் கொந்தளிப்பு: உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வுக்குக் கோரிக்கை!
கோவை, தொண்டாமுத்தூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சப்பாத்தி கல்லைக் காட்டிலும் கடினமாக உறைந்து போயிருந்த அதிர்ச்சியூட்டும் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியின் மாணவர் விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதியில் நேற்று இரவு உணவாக மாணவர்களுக்குச் சப்பாத்தி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்தச் சப்பாத்தி சமைக்கப்பட்டுச் சுடச்சுட வழங்கப்படாமல், மிகக் கடினமாகவும் பாறையைப் போன்று உறைந்தும் காணப்பட்டு உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் சிலர், அந்தச் சப்பாத்தியைக் கையில் எடுத்து அலுமினியப் பாத்திரத்தின் மீது ஓங்கித் தட்டி உள்ளனர்.
பாத்திரத்தில் பலமாகத் தட்டியும் கூட அந்தச் சப்பாத்தி சிறிதும் உடையாமலும் நொறுங்காமலும் கல்லைப் போல இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தச் சம்பவத்தை மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றினர். இந்தத் திகிலூட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகிறது.
விடுதியில் தொடர்ந்து தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகளே வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் பல மாணவர்களுக்குச் செரிமானக் கோளாறுகள் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கல்லூரி விடுதிகளில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விடுதியில் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவு தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்: