பாதுகாப்பான பகுதியிலே கேமராக்கள் செயலிழப்பு : உடனே சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள மிக முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அருகிலேயே, அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பழுதடைந்து பயன்பாடின்றி தொங்கிக் கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகரின் இதயமாகவும், மிக முக்கிய நிர்வாக மையங்களாகவும் விளங்குபவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் அலுவலக வளாகங்கள் ஆகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியிலும், அதனைச் சுற்றி உள்ள சாலைகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையின் சார்பில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இவ்விரு முக்கிய அலுவலகங்களின் மிக அருகிலேயே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சில, கடந்த ஒரு வார காலமாக ஒயர்கள் அறுந்தும், திருப்பப்பட்ட நிலையிலும் முற்றிலும் பயனற்றுத் தொங்கிக் கொண்டு இருக்கின்றன.
குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போக்குவரத்தைக் கண்காணிக்கவும், விபத்துக்கள் அல்லது அசம்பாவிதங்கள் நடக்கும் போது துப்புதுலக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த கேமராக்கள், பாதுகாப்பு மண்டலத்திலேயே பராமரிப்பின்றிச் செயலிழந்து கிடப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
மாநகரின் பிற பகுதிகளில் வழிப்பறி, நகைப் பறிப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடக்கும் போது, சி.சி.டி.வி காட்சிகளை வைதே காவல் துறையினர் குற்றவாளிகளைக் விரைந்து தூக்கி வருகின்றனர். ஆனால், காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு சி.சி.டி.வி கேமராக்கள் இப்படிப் பழுதடைந்து கிடப்பது குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும் எனப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, கோவை மாநகரக் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை விரைந்து சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: