புதன், 2 செப்டம்பர், 2026

"மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு... துப்பாக்கி முனையில் மிரட்டல்" ; கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!

SHARE

5 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி பவன்குமார் தீவிர தேடுதல் வேட்டை: மாவட்ட எல்லைகளில் பலத்த சோதனைகள்!

 கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில், மலேசியாவில் இருந்து வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது மர்ம நபர்கள் அரிவாளால் வெறித்தனமாகத் தாக்குதல் நடத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டித் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய நாட்டில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்குச் சுற்றுப் பயணமாக 10 பேர் கொண்ட பயணிகள் குழுவினர் 'ஃபோர்ஸ் அர்பானியா' (Force Urbania) வாடகை வேன் மூலம் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

​கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜி. சாவடி அடுத்த நவக்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேனுக்கு எரினாயில் நிரப்ப ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். அப்போது வேனில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அங்கு இருந்த கழிவறைக்குச் சென்ற போது, அங்கு நின்று இருந்த இரு நபர்களுடன் எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

வாக்குவாதம் முற்றவே, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இரு மர்ம நபர்கள், ஆத்திரம் அடைந்து 10 மலேசியச் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து இருந்த 'ஃபோர்ஸ் அர்பானியா' வாகனத்திற்கு உள்ளேயே அதிரடியாகப் புகுந்து, தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

​இந்தக் கொடூரத் தாக்குதலில் மலேசியச் சுற்றுலாப் பயணியான லோகநாதன் மற்றும் அவரது மகனான யுகேந்திரன் ஆகிய இருவருக்கும் வயிறு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

தாக்குதல் நடத்திய பின், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர். அஞ்சிய ஓட்டுநர் காயம் அடைந்தவர்களுடன் வேனை மதுக்கரை நோக்கி விரைவாகச் செலுத்தினார். ஆனால், விடாமல் பின்தொடர்ந்து துரத்தி வந்த அந்த மர்ம நபர்கள், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வைத்து வேன் ஓட்டுநரைச் சூழ்ந்து கத்தி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளனர்.

​பதற்றமடைந்த ஓட்டுநர் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் சிக்கி வாகனத்தை நிறுத்தவே, அப்பகுதி பொதுமக்கள் பெருமளவில் கூடினர்.

 பொதுமக்கள் திரள்வதைக் கண்ட அந்த மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய லோகநாதன் மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உடனடியாக மீட்டு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுக்கரை காவல்துறையினர் சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.

​சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன்குமார், கள ஆய்வு மேற்கொண்டு மதுக்கரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தினார்.

 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் நடத்தி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டித் தப்பியோடிய அந்த இரு மர்ம நபர்களையும் பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 கோவை மாவட்ட எல்லைப் பகுதிகள் முழுவதிலும் பலத்த வாகனத் தணிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: