செவ்வாய், 22 செப்டம்பர், 2026

"பொட்டல் காட்டில் சீறிப்பாய்ந்த கார்கள்" - கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம் ; ரசிகர்கள் பரவசம்!

SHARE

பட்டணம்புதூர் புழுதி மைதானத்தில் நடந்த த்ரில்லிங் ரேஸ்: வெற்றியாளர்கள் குடகு சுற்றுக்குத் தகுதி!

​ கோவை அருகே உள்ள பட்டணம்புதூர் பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில், புழுதி பறக்க அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களையும் கார் பந்தய ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு (FMSCI) சார்பில் நாட்டின் பல்வேறு இடங்களில் கரடுமுரடான புழுதி மைதானங்களில் தேசிய அளவிலான கார் பந்தயங்கள் (National Rally Championship) நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 2-வது சுற்றுப் போட்டிகள் கோவை அடுத்த சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றன.

​நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தத் த்ரில்லிங் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பிரபல கார் பந்தய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது ரேஸ் கார்களுடன் கலந்து கொண்டனர்.

சுற்றுப்புறப் பொட்டல் காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கரடுமுரடான பந்தயப் பாதையில், வீரர்கள் தங்களது கார்களை அதிவேகத்தில் செலுத்திப் புழுதி பறக்கச் சீறிப்பாய்ந்தனர்.

 வளைவுகளிலும் மேடு பள்ளங்களிலும் கார்கள் சாகசமாகப் பறந்து சென்றதை அங்கே திரண்டு இருந்த ஏராளமான பார்வையாளர்கள் ஆச்சரியத்துடனும், பெருத்த கரகோஷத்துடனும் கண்டு களித்தனர்.

இப்போட்டியில் தீவிரமாகப் பங்கேற்று பல்வேறு சுற்றுகளில் முன்னிலை வகித்த முன்னணி வீரர்களான டீன் மெக்கரினாஸ் (Dean Mascarenhas), ககன் கரும்பையா (Gagan Karumbaiah) மற்றும் வீராங்கனை ஷிவானி பிரித்வி (Shivani Pruthvi) ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

​"கோவையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியையும் சவாலையும் அளித்தது. கோவையில் கார் பந்தயங்களுக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸிற்கும் ரசிகர்கள் இடையே இருக்கும் ஆர்வமும் வரவேற்பும் எங்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது."

​போட்டியின் முடிவில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு 'புளூபேண்ட் ஸ்போர்ட்ஸ் ரேளி ஆஃப் கோயம்புத்தூர்' (Blueband Sports Rally of Coimbatore) சார்பில் கோப்பைகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கிப் பாராட்டப்பட்டது.

​இப்போட்டியில் சிறப்பிடம் பிடித்த வீரர்கள் அடுத்து வரும் நவம்பர் மாதம் 20 முதல் 22-ஆம் தேதி வரை கர்நாடக மாநிலம் குடகில் நடைபெற உள்ள 3-வது சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்று உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: