இரசாயனத்தை அப்புறப்படுத்தவும், வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கைது செய்யவும் பொதுமக்கள் கொந்தளிப்பு!
கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள மண் சாலையில் மர்ம நபர்கள் கழிவு கெமிக்கல் பாக்கெட்டுகளை வீசிச் சென்றதால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி பயன்படுத்தும் மண் சாலை உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், அப்பகுதியில் ஆபத்தான கெமிக்கல் பாக்கெட்டுகளைச் சாலையில் கொட்டி விட்டுத் தப்பிச் சென்று உள்ளனர்.
அந்தப் பாக்கெட்டுகளில் இருந்து இரசாயனக் திரவம் கசிந்து சாலை முழுவதிலும் பரவியதால், மண் சாலை முற்றிலும் வழவழப்பாக மாறி உள்ளது.
இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்கள் பலர், சாலையில் கெமிக்கல் கொட்டப்பட்டு இருப்பதை அறியாமல் சென்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி விழுந்தனர். இதில் பலருக்குக் கை, கால்களில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளன.
தொடர்ந்து அடுத்தடுத்து வாகனங்கள் வழுக்கி விழுவதைக் கண்ட அப்பகுதி வாசிகள் உடனடியாக ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஆபத்தான முறையில் கெமிக்கலைச் சாலையில் கொட்டிச் சென்ற நபரைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அந்த மண் சாலையில் பரவி உள்ள இரசாயனக் கழிவுகளைத் மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நகரின் பாதுகாப்பு மண்டலமான விமான நிலையப் பகுதியிலேயே கெமிக்கல் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: