புதன், 27 மே, 2026

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது: பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல் !!!

SHARE

 மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது: பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல் !!!

மேகதாது அணை விவகாரம், தமிழ்தாய் வாழ்த்து விவகாரம் என பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் முன்வைத்து உள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த சந்திப்பின் போது பிரமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், புதுதில்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (27.05.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, [மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின் போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது. ஆனால் உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்க வேண்டும்.

மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்த உள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அறிவித்து இருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகள் இடையே பெருங்கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்து உள்ளது. 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர். 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. எனவே மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: