பயிர்க்கடன் தள்ளுபடி; த.வெ.க அரசை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் !!!
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அரசின் நடவடிக்கை உள்ளது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்து உள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூபாய் 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருந்தார்.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்து உள்ள விவசாயிகள் பெற்ற கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரூபாய் 50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதற்கு அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது அறிக்கை வாயிலாக அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று (மே 27) சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதியின் எம்.எல்.ஏ வுமான ஓ.எஸ்.மணியன், "தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அரசின் நடவடிக்கை உள்ளது. த.வெ.க வின் தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன்கள் முழுமையாக ரத்துச் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார். ஆனால் தற்போதைய விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும், பொதுமக்களும் கண்டித்து உள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத ஒரு மோசமான அறிவிப்பு இது. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை சொன்னபடி நிறைவேற்ற வேண்டாமா ? அதைத் தான் விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. வரும் ஜூன் 30- ஆம் தேதி விவசாயக் கடன்கள் செலுத்தப்பட வேண்டும். அப்போது தான் புதிய கடன் பெற முடியும். அனைவருடைய கண்டனத்தையும், எதிர்ப்பையும் இவர்கள் பெற்றிருக்கின்றனர். இந்த பயிர்க்கடன் தள்ளுபடியை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
இதன் இடையே, தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து உள்ள நிலையில், வரும் ஜூன் 01- ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது.

0 கருத்துகள்: