பாலியல் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான செயல் திட்டம்; தமிழக அரசுக்கு நீதிமன்றம் கெடு !!!
பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக முடிப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை ஜூலை 30 ஆம் தேதி, தமிழக அரசு முன்வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், திருவண்ணாமலையை சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர், அதே வட்டாரத்தில் உள்ள இரண்டு காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். ஆகையால், தனக்கு நியாயம் வேண்டி அவர் காவலர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருந்தார்.
ஆனால், நீண்ட போராட்டத்துக்கு பின்னர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காவலர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், இப்போது வரை விசாரணை தொடங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
மேலும் இதனால் மனவேதனை அடைந்த பாதிக்கப்பட்ட பெண், இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த மனுவில், 'தன்னுடைய வழக்கை போலவே மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும் காவலர்கள் விசாரணையை தொடங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்' என கோரி இருந்தார்.
மேலும், 'குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை முடிக்க வேண்டும், என அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட வேண்டும்' எனவும் அவர் கோரி இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு செயல் திட்டத்தை வகுக்க குறைந்தது 2 முதல் 3 வாரங்கள் வரை ஆகும். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன" என தெரிவித்தார்.
இதை அடுத்து, "அனைத்து பாலியல் குற்ற வழக்குகளையும் விரைவாக முடிப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை ஜூலை 30 ஆம் தேதி, அரசு முன்வைக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், "பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்" எனவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

0 கருத்துகள்: