திருமயம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து - உரிமையாளர் பலி !!!
திருமயம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. கடந்த 20 வருடங்களாக திருமணங்கள், கோவில் திருவிழாக்களுக்கு நாட்டு வெடி, வானவேடிக்கை வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
இன்று காலை பட்டாசு குடோனில் கருப்பையா, பணியாளர் பிரம்மன் ஆகியோர் வேலை செய்து கொண்டு இருக்கும் போது திடீரென பட்டாசு குடோனில் இருந்த வெடிகள் வெடித்து சிதறியது. இதில் கருப்பையா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரம்மன் படுகாயங்களுடன் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் காவல் துறையினர் வெடி விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: