வெள்ளி, 29 மே, 2026

செங்கல் சூளை உரிமையாளர்களிடம் பணம் கேட்ட விவகாரம்; த.வெ.க முன்னாள் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு !!!

SHARE

 செங்கல் சூளை உரிமையாளர்களிடம் பணம் கேட்ட விவகாரம்; த.வெ.க முன்னாள் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு !!!

பணம் கேட்டு மிரட்டியதாக தவெக முன்னாள் நிர்வாகி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

வேலூர் மாவட்டம், கண்ணியம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் சில செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் வழங்க வேண்டும் என த.வெ.க-வின் கண்ணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் (இந்த குற்றச்சாட்டு எழுந்தநிலையில் விஜயகுமார், த.வெ.க-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் சிலர் இணைந்து கண்ணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். ஆனால் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகையால், போலீஸாரின் இந்த செயலைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை (மே 25) அன்று கண்ணியம்பாடி பேருந்து நிலையம் அருகே செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் செந்தில்குமார், இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், "இதற்கு பின்னரும் நடவடிக்கை எதுவும் இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய காவல்துறை தவறிவிட்டது" என குற்றம்சாட்டி கண்ணியம்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் அறிவித்தனர்.

அதே நேரத்தில், விஜயகுமாருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம், அளித்த புகாரின் பேரில் விஜயகுமார், லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய மூவர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அவதூறாக பேசியது, மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், விஜயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் செங்கல் சூளை உரிமையாளர்கள் சண்முகம், ரமேஷ், சுனில் ஆகியோர் மீதும் வழிமறித்து மிரட்டியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிந்து உள்ளனர்.

இருதரப்பினருக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க கண்ணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: