பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அவலம் ; மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் ‘அவுட் ஆஃப் ஆர்டர்’ - கோவில் ஊழியர்களின் அலட்சியத்தால் பக்தர்கள் வேதனை !!!
முதியோர் வசதிக்கான உபகரணங்களை லோடு வண்டியாக மாற்றிய கொடுமை – நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை ?
கோவை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த சக்கர நாற்காலிகள் கோவில் ஊழியர்களின் அசாத்திய அலட்சியத்தால் முற்றிலும் முடங்கிக் கிடக்கும் அவலம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
நடைப் பயிற்சி மேற்கொள்ள முடியாத வயோதிகர்களும், மாற்றுத் திறனாளி பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வதற்காகத் தன்னார்வலர்கள் மற்றும் அரசுத் தரப்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் இந்தச் சக்கர நாற்காலிகள் உபயமாக வழங்கப்பட்டு இருந்தன. ஆனால், இந்த உபகரணங்களை உரியவர்களிடம் சேர்க்காமல், கோவில் வளாகத்திற்குள் இருக்கும் கனமான பொருட்களை ஏற்றிச் செல்லும் ‘லோடு வண்டியாக’ ஆலய ஊழியர்கள் சிலர் தவறாகப் பயன்படுத்தி வந்ததாக வீடியோ ஆதாரத்துடன் பக்தர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர்.
அளவுக்கு அதிகமான எடையைக் கொண்ட கோவில் சாமான்களை ஏற்றி, அஜாக்கிரதையாகக் கையாண்டதன் காரணமாக, பாதி சக்கர நாற்காலிகள் தற்போது பழுதடைந்து, உடைந்து போய் மூலையில் வீசப்பட்டு உள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்த முடியாமல், தங்களின் உறவினர்கள் தோள்களில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அரங்கேறி வரும் இந்த அவலம் குறித்துப் பக்தர்கள் கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோவில் உயர் அதிகாரிகள் உடனடியாக இந்த உணர்ந்து தலையிட வேண்டும் என்றும், பழுதடைந்த நாற்காலிகளைப் போர்க்கால அடிப்படையில் ‘சர்வீஸ்’ செய்து, அவை மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே பயன்படுவதை நடவடிக்கை வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

0 கருத்துகள்: