வாங்கி ஒரு வருஷம் தான் ஆச்சு... அதுக்குள்ள ஆட்டையப் போட்டான்” ; கோவை ரயில் நிலையம் அருகே லாட்ஜ் ஊழியரின் ₹15,000 கியர் சைக்கிள் திருட்டு - சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு !!!
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கீதா கேண்டீன் பகுதியில், லாட்ஜ் ஊழியர் ஒருவரின் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ள கியர் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் நைசாகத் திருடிச் செல்லும் அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகரின் பிரதானப் பகுதியான ரயில் நிலையம் மற்றும் கீதா கேண்டீன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தினந்தோறும் வேலைக்கு வருவதற்குத் தனது கியர் சைக்கிளைப் பயன்படுத்தி வந்து உள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த ஊழியர் வழக்கம் போல் லாட்ஜ் தரைதளத்தில் பார்க்கில் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று உள்ளார். அப்போது அங்கு உலா வந்த மர்ம நபர் ஒருவர், அக்கம், பக்கம் யாரும் இல்லாததை உன்னிப்பாக நோட்டமிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அந்த சைக்கிளை ஏறி மிதித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடி உள்ளார்.
வேலை முடிந்து வெளியே வந்து பார்த்த ஊழியர், தனது சைக்கிள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
திருடப்பட்ட அந்த கியர் சைக்கிள் வாங்கி இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக நிறைவடையவில்லை என்றும், அதன் சந்தை மதிப்பு சுமார் 15,000 ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய சைக்கிள் திருடுபோனதால் அந்த ஏழைத் தொழிலாளி மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளார்.
பாதிக்கப்பட்ட லாட்ஜ் ஊழியர் தரப்பில், கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி ஆதாரங்களுடன் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அந்த மர்ம நபர் மிகச் சாதாரணமாக நடந்து வந்து, சைக்கிளைத் திருடிக் கொண்டு செல்லும் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

0 கருத்துகள்: