திருவள்ளூர் தொழிற்சாலையில் மீதமுள்ள 2 டன் அம்மோனியா வாயு இன்று அகற்றம் - தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம் !!!
அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த தனியார் கடல் உணவுகள் ஏற்றுமதி தொழிற்சாலையில் மீதமுள்ள 18 டன் அம்மோனியா வாயு இன்று பாதுகாப்பாக வெளியேற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகை பேர் கிராமத்தில், தனியார் கடல் உணவுகள் ஏற்றுமதி நிறுவனத்தின் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21-ம் தேதி அம்மோனிய வாயு கசிந்து, பெண் தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நிகழ்ந்து 13 நாட்கள் கழித்து நேற்று அந்த நிறுவன வளாகத்தில் இருந்து மீதமுள்ள சுமார் 2,000 லிட்டர் அம்மோனியா வாயுவை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. சவாலான இந்தப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின்ர், தமிழக தீயணைப்பு படை வீரர்கள், காவல் துறையினர் என பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இப்பணிக்கான முன்னெடுப்பு மாதிரி ஒத்திகை நேற்று நடைபெற்றது. கிராமத்தினர் 300 மீட்டர் சுற்றளவு முதல் 500 மீட்டர் சுற்றளவு வரை அம்மோனியா வாயு வெளியேற்றப்படும் தொழிற்சாலைக்கு அருகில் வராமல் விலகி இருக்கவும், பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படியும் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வாயிலாக கிராமம் முழுவதும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தொழிற்சாலை அருகில் உள்ள தனியார் நிறுவனங்கள், குடோன்கள், அங்கன்வாடி மையம், அரசுப் பள்ளி ஆகியவற்றிற்கு இன்று சனிக்கிழமை என்ற போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து உள்ளது.
இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை அம்மோனியா வாயு அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஈடுபட உள்ளனர். அதற்கான பிரத்யேக உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு மாதிரி ஒத்திகையை நேற்று அவர்கள் நடத்தினர்.
இன்று மாலை 5 மணிக்கு மேல் அம்மோனிய வாயுவை அகற்ற நேரம் பிடித்தால் நாளை மறுநாளும் இந்த பணியில் வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியார் கவிதா தெரிவித்து உள்ளார். நவீன தொழில்நுட்ப உதவியுடன் அம்மோனியா வாயு அகற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொழிற்சாலையில் இருந்து 300 மீட்டர் முதல் 500 மீட்டர் தூரம் வரை இடைவெளி கடைபிடிக்கப்படுவதாக தெரிவித்த ஆட்சியர், போக்குவரத்தையும் அப்பகுதியில் தடை செய்து மாற்று வழியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவசர தேவைகளுக்காக மருத்துவ குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயு அகற்றும் பணியின் காரணமாக, சின்ன காலனி மற்றும் பெரிய காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒருநாள் மட்டும் அவர்களின் உறவினர் வீடுகளுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

0 கருத்துகள்: