போதை மாத்திரைகள் பறிமுதல்... கோவை செக் போஸ்ட்டில் ஒருவர் கைது: ₹3.50 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் !!!
கோவை, தடாகம் அருகே மாங்கரை பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வாலிபரைத் தடாகம் போலீசார் கையும், களவுமாகப் பிடித்து, அவரிடம் இருந்து சுமார் ₹3.50 லட்சம் மதிப்புள்ள 1,070 கிராம் எடை கொண்ட ‘டெபண்டால்’ (Tapentadol) போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, தடாகம் வன எல்லை மற்றும் மலைப் பகுதியான மாங்கரை சுற்றவட்டாரத்தில் இளைஞர்களை இலக்காகக் கொண்டு ஆபத்தான போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகத் தடாகம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த உடனடியாகச் செயல்பட்ட தடாகம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், மாங்கரை சோதனைச் சாவடி அருகே ரகசியக் கண்காணிப்பு மற்றும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்துப் போலீசார் சல்லடை போட்டுச் சோதித்தனர். விசாரணையில், அவர் கோவை கணுவாய், குப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (29) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பைகளை ஆய்வு செய்த போது, சட்ட விரோதமாக விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,070 கிராம் எடை உள்ள ‘டெபண்டால்’ எனும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஆபத்தான போதை மாத்திரைகள் மற்றும் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ₹3,50,000 ஆகும்.
இதனைத் தொடர்ந்து, போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைத் தடைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்த தடாகம் போலீசார், கைதான விஷ்ணுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப்மத்திய சிறையில் அடைத்தனர்.
அண்மைக் காலமாகப் பொள்ளாச்சி, தடாகம் மற்றும் எல்லைப் பகுதிகளில் வாலிபர்களைச் சீரழிக்கும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்து வருவதால், இத்தகைய நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: