புதன், 22 ஜூலை, 2026

த.வெ.க எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் 3 பேரிடம் தீவிர விசாரணை !!!

SHARE

 த.வெ.க எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் 3 பேரிடம் தீவிர விசாரணை !!!

த.வெ.க எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் இன்று (ஜூலை 20) மேலும் 3 பேரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தாங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசி தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க ஆட்சியை கவிழ்ப்பதற்காக சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி செயலில் ஈடுபட்டதாக ஐ.டி.பி.எஸ். என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ் உள்பட 14 பேரை திருவல்லிக்கேணி காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் நீதிமன்றம் மூலம் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின் பெற்றனர்.

இந்நிலையில், கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், த.வெ.க ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்திற்கு “மேகாலயா பிராஜக்ட்” என்று அவர்கள் பெயரிட்டு உள்ளனர் எனவும், கைது செய்யப்பட்டு உள்ள திருநாவுகரசு மேலும் சிலருடன் சேர்ந்து சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது த.வெ.க எடுக்கும் நிலைப்பாட்டை மீறி அவர்கள் சொல்லும்படி வாக்களிப்பவர்களுக்கு ரூ.35 கோடி லஞ்சமாக வழங்குவதாக பேரம் பேசியதும் தெரிய வந்து உள்ளது.

மேலும், மேகாலயா பிராஜக்ட் என்ற பெயரில் சுமார் 15 தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியின் நிலைத் தன்மையை சீர் குலைக்கும் வகையில் கைதானவர்கள் செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த 3 பேரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக, தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சரவணன், கருணாநிதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.2.82 கோடி வரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இந்த பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2.82 கோடி ரூபாயை இன்று (ஜூலை 20) திருவல்லிக்கேணி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க திட்டமிட்டு உள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: