தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள்: மாணவர்களுக்கு வனத்துறை தீவிர எச்சரிக்கை!
கோவை, பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் காட்டுப் பன்றி ஒன்று சர்வ சாதாரணமாக உலா வந்து, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழங்களை உண்ணும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள அமைதியான சூழலில் பாரதியார் பல்கலைக் கழகம் அமைந்து உள்ளது. அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருப்பதால், பல்கலைக் கழக வளாகத்திற்குள் சர்வ சாதாரணமாக மான், முயல், காட்டுப்பன்றி, யானைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நுழைவது வழக்கமாகும்.
தற்போது கோடை மழை போதிய அளவு பெய்யாததால், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், உணவையும் தண்ணீரையும் தேடி வனவிலங்குகள் இரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் குறைந்த நேரங்களிலும் வன எல்லையை விட்டு வெளியேறி பல்கலைக் கழக வளாகத்திற்குள் படையெடுத்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் நுழைந்த காட்டுப்பன்றி ஒன்று, அங்கு கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும், அழுகிய பழங்களையும் சர்வ சாதாரணமாகத் தேடி உண்ணும் காட்சிகள் பதிவாகி உள்ளன. வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது அவற்றின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், இது இயற்கை ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வளாகத்திற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் மற்றும் பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பல்கலைக் கழக விடுதிகளில் தங்கி உள்ள மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
இரவு நேரக் காவல் பணியில் ஈடுபடும் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வளாகத்திற்குள் வனவிலங்குகளைக் கண்டால் அருகில் செல்லவோ, அவற்றுக்கு உணவு வழங்கவோ கூடாது.
மேலும், பல்கலைக் கழக வளாகத்தில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதைத் தடுத்து, வனவிலங்குகள் உள்ளே நுழைவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேராசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: