தண்ணீர் பந்தல் சாலையில் அரங்கேறிய நடுரோட்டு அதிரடி: பொதுமக்கள் அச்சம், சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி!
கோவை, பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் இயங்கி வரும் '11 to 11' பாரில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி கொள்ளும் வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, பீளமேடு பகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில் பிரபல ‘11 to 11’ மதுபானக் கூடம் (Bar) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது அருந்த வந்த சில நபர்களுக்கு இடையே எதிர்பாராத விதமாக வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
மது போதை தலைக்கேறிய நிலையில், தகராறு முற்றிப் பாரின் உள்ளேயும், வெளியேயும் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
ஆத்திரம் அடைந்த நபர்கள் அங்கு இருந்த நாற்காலிகள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.
பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களும், அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர மோதலை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார்.
தற்போது அந்தச் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீடியோவில், மதுப்பிரியர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கும் கொடூரக் காட்சிகள் பதிவாகி உள்ளன.
இதுபோன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மதுபானக் கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: