வெள்ளி, 18 செப்டம்பர், 2026

"குட்டியுடன் ஆற்றில் குளித்து மகிழ்ந்த யானைகள்" - மதுக்கரையில் நெகிழ்ச்சி சம்பவம்: தாய் யானையின் பாசப் போராட்டம் வைரல்!

SHARE

 முன்னங்காலில் காயத்துடன் மெதுவாக நடந்த குட்டி : பத்திரமாக அரவணைத்துச் சென்ற யானைக்!

 கோவை மதுக்கரை அருகே குட்டியுடன் ஆற்றுக்கு வந்து குளித்து மகிழ்ந்த காட்டு யானைகளின் அரிய புகைப்படங்களும், காயம் அடைந்த குட்டியைத் தாய் யானை பாசத்துடன் அரவணைத்து அழைத்துச் செல்லும் உணர்வுப் பூர்வமான செல்போன் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் வனவிலங்குகள் நீர்நிலைகளைத் தேடி வரத் தொடங்கி உள்ளன.

​இந்நிலையில், மதுக்கரை அருகே உள்ள புதுப்பதி கிராமப் பகுதிக்கு உட்பட்ட ஆற்றுக்கு, ஒரு குட்டி யானை உட்பட 3 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் பிற்பகல் வேளையில் வந்து உள்ளது. அங்கு இருந்த ஆற்றில் தண்ணீரைத் தாகம் தீர அருந்திய யானைகள், கரையில் இருந்த பசுமையான புல்வெளிகளை மேய்ந்தபடி நீரில் குளித்து மகிழ்ந்தன. அப்போது, குட்டி யானை ஆற்றில் பாதுகாப்பாகக் குளிப்பதை மற்ற யானைகள் கவனமாகப் பார்த்துக் கொண்டன.

ஆற்றில் குளித்து முடித்த பிறகு, யானைக் கூட்டம் கரையேறிச் சாலையைக் கடந்து வனப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கியது. அப்போது, அந்தச் சிறிய குட்டி யானையின் முன்னங்காலில் பலத்த அடிபட்டுப் வீக்கம்/கட்டி போன்ற காயம் இருந்தது தெரியவந்தது.

​காயத்தின் வலியால் அந்தச் சிறிய குட்டி யானை தள்ளாடியபடியும், உடலை ஒரு பக்கமாகச் சாய்த்தபடியும் மெதுவாக நடந்து சென்றது. இதைப் பார்த்த தாய் யானை, குட்டிக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து, சாலையின் இருபுறமும் பாதுகாப்பாக நின்று குட்டியைத் தனது தும்பிக்கையால் அரவணைத்து மெல்ல, மெல்ல வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றது.

அந்தச் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர், தாய் யானை குட்டியைக் கவனமாக அழைத்துச் செல்லும் இந்த நெகிழ்ச்சியான காட்சிகளைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். 

இந்தத் தத்ரூபமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் நெகிழ வைப்பதுடன் வைரலாகி வருகிறது.

​சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்று உள்ள அந்தக் குட்டி யானையின் காலில் உள்ள காயத்தைக் கண்டறிந்து, அதற்குத் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாக வழங்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: