வெள்ளி, 18 செப்டம்பர், 2026

"வீட்டின் கதவை உடைத்து உணவுத் தேடிய காட்டுயானை" ; தடாகம் அருகே அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி!

SHARE

மாட்டு கொட்டகைத் தாக்குதலைத் தொடர்ந்து மீண்டும் அட்டகாசம்: இரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிராம மக்கள்!

 கோவை மாவட்டம், தடாகம் அருகே உச்சையனூர் பகுதியில் நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அடுத்தடுத்து விவசாயிகளின் வீடுகளின் கதவுகளை உடைத்து உணவைத் தேடி புகுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே கடும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடியவாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த தினத்தில் தான் தடாகம் எஸ்.எம். நகரில் மாட்டு கொட்டகைக்குள் புகுந்து மாட்டைத் தாக்க முயன்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

​இந்நிலையில், நேற்று நள்ளிரவு அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய அதே ஒற்றைக் காட்டு யானை, தடாகம் அருகே உள்ள உச்சையனூர் கிராமப் பகுதிக்குள் நுழைந்தது. அங்கு உள்ள விவசாயி கந்தசாமி என்பவரது தோட்டத்து வீட்டின் முன்பக்கக் கதவை அந்த யானை தனது தும்பிக்கை மற்றும் தந்தத்தால் பலமாக இடித்து உடைத்து உள்ளே உணவைத் தேடி உள்ளது.

கந்தசாமி தோட்டத்து வீட்டில் புகுந்தது. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் பகுதிகளைச் சேதப்படுத்தி, வீட்டிற்குள் உணவுப் பொருட்கள் உள்ளதா என தேடி பார்த்து உள்ளது. பின்னர் அங்கு இருந்து மோகன் என்பவர் வீட்டின் காம்பட்டுக்குள் உள்ளே புகுந்ததால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உறைந்தனர்.

 தடாகம், உச்சையனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் ஊடுருவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருப்பதால், அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன் வனத்துறை சார்பில் கூடுதல் வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமித்து, இரவு நேரச் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: