மாட்டு கொட்டகையில் தீவனத்தைத் தின்று தாகம் தீர்த்த வனவிலங்கு: இரவு நேர ரோந்தை அதிகரிக்கக் கோரிக்கை!
கோவை மாவட்டம், தடாகம் அருகே நள்ளிரவில் மாட்டு கொட்டகைக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு இருந்த மாட்டைத் தாக்க முயன்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடியவாரத்தை ஒட்டி உள்ள தடாகம், மாங்கரை, சோமையனூர், பன்னீர்மடை, நஞ்சுண்டாபுரம் மற்றும் திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் மிக தீவிரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வேளையில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று, தடாகம் உச்சையனூர் கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து சுற்றித் திரிந்து உள்ளது. அப்போது, அப்பகுதியில் உள்ள எஸ்.எம். நகரில் வசிக்கும் விவசாயி ஒருவரின் வீட்டின் பின்புறம் இருந்த மாட்டு கொட்டகைக்குள் புகுந்த அந்த யானை, மாடுகளுக்காக வைக்கப்பட்டு இருந்த தீவனங்களைச் சுவைத்துத் தின்று உள்ளது.
அப்போது மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த மாடுகள் யானையைக் கண்டு பயத்தில் உரக்கக் கத்திச் சத்தமிட்டு உள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த ஒற்றை யானை, திடீரென ஒரு மாட்டை நோக்கித் தாக்கப் பாய்ந்தது.
எனினும், யானையின் தாக்குதலைக் கணித்த அந்த மாடு அதிர்ஷ்டவசமாகப் பக்கவாட்டில் தாவிப் பின்னோக்கிச் சென்றதால், யானையின் தாக்குதல் இருந்து லேசான காயமின்றிக் தப்பியது. இதை அடுத்து அந்த யானை மெல்ல அங்கு இருந்து நகர்ந்து சென்றது.
மாட்டு கொட்டகையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தத் திகிலூட்டும் காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் உருவாக்கி உள்ளது.
குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானைகள் தொடர்ந்து நுழைவதைத் தடுக்க, தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனத்துறையினர் இரவு நேரச் சிறப்பு ரோந்துப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என கிராமப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: