கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபப் பலி: உண்மையான காரணத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம்!
கோவை, வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட 10 மாதப் பெண் குழந்தை, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறிப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி - சரண்யா தம்பதியினர், கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது 10 மாதப் பெண் குழந்தையான கனிஷ்கா ஸ்ரீ என்பவருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்காக கடந்த 7ஆம் தேதி பெற்றோர் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
அங்குப் பணிபுரியும் செவிலியர் குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்தியதுடன், காய்ச்சல் ஏற்பட்டால் வழங்குவதற்காக மாத்திரை ஒன்றையும் கொடுத்து அனுப்பி உள்ளார். அதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால் பெற்றோர் அந்த மாத்திரையைக் கொடுத்து உள்ளனர்.
மாத்திரை கொடுத்த பிறகு குழந்தை இயல்பு நிலையை இழந்து மிகவும் சோர்வாகக் காணப்பட்டு உள்ளது. பின்னர் வெள்ளிக்கிழமையன்று குழந்தைக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாகக் குழந்தையை மீண்டும் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
அங்குப் பரிசோதித்த செவிலியர், குழந்தைக்கு மீண்டும் ஒரு ஊசியைச் செலுத்தியதுடன், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு (GH) அனுப்பி வைத்து உள்ளார். கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த நான்கு நாட்களாகக் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
"மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு வரை எங்கள் குழந்தை மிகவும் ஆரோக்கியமாகத்தான் விளையாடிக் கொண்டு இருந்தது. தடுப்பூசி போட்ட பின்னர்தான் குழந்தைக்குப் பிரச்சனை தொடங்கியது."
"மயக்கம் அடைந்து வந்த போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் ஒரு ஊசியைச் செலுத்திய பிறகுதான் குழந்தையின் நிலைமை மிகவும் மோசமானது."
"குழந்தைக்கு மாரடைப்பு, மூளைக் காய்ச்சல், சிறுநீரகக் கோளாறு எனப் பல பாதிப்புகள் இருந்ததாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆரோக்கியமாக இருந்த குழந்தைக்குத் திடீரென எப்படி இத்தனை பாதிப்புகள் வந்தன ? எங்களது கேள்விகளுக்கும் சிகிச்சை விவரங்களுக்கும் மருத்துவர்கள் உரிய பதில் அளிக்க மறுக்கிறார்கள்." எனக் குற்றம்சாட்டினர்.
ஆரோக்கியமாக இருந்த தங்கள் பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்த காரணத்தைக் கண்டறிந்து, உரிய மருத்துவ விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: