செவ்வாய், 27 அக்டோபர், 2026

தங்கத்திற்குப் பதில் போலி உலோகம்" - கோவையில் வியாபாரிகளை ஏமாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது : 265 கிராம் தங்கம் பறிமுதல்!

SHARE

போலிப் பித்தளையைக் கொடுத்து '916 தங்கம்' என ஏமாற்றிய வடமாநில கும்பல்: அதிரடியாகத் தூக்கிய மாநகரக் காவல் ஆணையரின் தனிப்படை!

 கோவையில் தங்க நகை கட்டிகள் தருவதாகக் கூறி போலி உலோகத்தைக் கொடுத்து, பல லட்சம் மதிப்பிலான 916 தங்க நகைகளை ஏமாற்றிப் பறித்துச் சென்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை கோவை மாநகரக் காவல் துறையினரின் தனிப்படை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது. 

கோவை மாநகரம், B3 வெரைட்டிஹால் ரோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராஜவீதி மற்றும் தெலுங்கு வீதி சந்திப்பில் கடந்த 13.06.2026 மற்றும் 12.09.2026 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து மோசடி சம்பவங்கள் அரங்கேறின.

தங்க நகை கட்டிகளைத் தருவதாகக் கூறி, அதைப் போன்றே இருக்கும் போலி உலோகத்தைக் கொடுத்து ஏமாற்றி விட்டதாகப் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தரப்பில் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

புகாரின் பேரில், கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, தெற்குப் பகுதி காவல் துணை ஆணையரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 தனிப்படை போலீசார் அறிவியல் பூர்வமான (Scientific & Technical Investigation) விசாரணையை மேற்கொண்டு, இந்தத் தொடர் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிந்தனர்.

அதன் அடிப்படையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே. ஜீல்பிகர் உசேன், ரூபல்காஜ் (25)

ஆகிய இருவரையும் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

எதிரிகள் இருவரும் காப்பர் (செம்பு) மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து போலி உலோகத்தை தயார் செய்து உள்ளனர்.

பின்னர், அதற்குத் தங்கம் போன்றே மின்னுவதற்காக நவச்சாரம் மற்றும் வெங்காரம் போன்ற வேதிப் பொருட்களைக் கொண்டு மெருகேற்றி (Chemical Polish) பாலீஸ் செய்து உள்ளனர்.

பார்ப்பதற்கு அசல் தங்கம் போலவே மின்னும் அந்தப் போலி உலோகத்தை வியாபாரிகளிடம் காட்டி, "அவசரமாகச் செல்ல வேண்டும்" என்று கூறி நம்ப வைத்து உள்ளனர்.

அதை உண்மை என நம்பிய வியாபாரிகளிடம் இருந்து 916 தங்க நகைகளை பெற்றுக் கொண்டு, போலி உலோகத்தைக் கொடுத்து விட்டுத் தப்பிச் சென்றது விசாரணையில் அம்பலமானது.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும், போலி உலோகம் தயாரிக்கப் பயன்படுத்திய வேதிப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வியாபாரிகளிடம் ஏமாற்றிப் பறிக்கப்பட்ட 265 கிராம் தங்க நகைகளும் மீட்கப்பட்டன. குற்றவாளிகள் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தெற்குப் பகுதி காவல் துணை ஆணையர் ஆகியோர் தங்க நகை தொழில் செய்யும் வியாபாரிகளுக்கும் பட்டறை உரிமையாளர்களுக்கும் முக்கிய வேண்டுகோள் விடுத்து உள்ளனர்:

"தங்க நகைகள் மற்றும் கட்டிகளை வாங்கும் போது போலிகளைக் கண்டு ஏமாறாமல் விழிப்புணர்வுடனும் கவனமாகவும் செயல்பட வேண்டும்."

மோசடி கும்பலை விரைவாகக் கண்டறிந்து கைது செய்ததோடு, ஏமாற்றப்பட்ட தங்கத்தையும் மீட்ட தனிப்படை போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தங்க நகை வியாபாரிகள், பட்டறை உரிமையாளர்கள் பாராட்டி உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: